கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பேருந்து சேவை, டாஸ்மாக் திறப்பு!

0
128

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும், 5ம் தேதி காலை, 6:00 மணிக்கு நிறைவடைகிறது. இந்நிலையில், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அளிப்பது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமை செயலகத்தில், மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது, புதிய தளர்வுகளை அறிவிப்பது, நோயை முழுமையாக கட்டுப்படுத்தவும், மூன்றாவது அலையை எதிர்கொள்ளவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களை மூன்று வகையாக வகைப்படுத்தி தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி, 2 வது வகையாக பிரிக்கப்பட்டுள்ள அரியலூர், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 23 மாவட்டங்கள் மற்றும் மூன்றாவது வகையான சென்னை உட்பட நான்கு மாவட்டங்கள் என மொத்தம் 27 மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட மாவட்டங்களில் தேநீர் கடைகளுக்கும் பார்சல் முறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தொற்று அதிகரிப்பு காரணமாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படாமல் உள்ளது.

இங்கு தேநீர் கடைகள், பொதுப்போக்குவரது, டாஸ்மாக் உள்ளிட்ட எதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது அறிவிக்கப்படவுள்ள தளர்வுகளில் மேற்கண்ட மாவட்டங்களில் தேநீர் கடைகளுக்கு அனுமதி மற்றும் மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படலாம் என்றும் மற்ற மாவட்டங்களில் பார்சல் முறை நீக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் கடையில் அமர்ந்து டீ அருந்த அனுமதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி மாநிலம் முழுக்க பொது பேருந்து போக்குவரத்து சேவைக்கு மீண்டும் அரசு அனுமதி அளித்துள்ளது. அதுபோல கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் தேநீர் கடைகளை திறக்கவும், 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து தேநீர் அருந்தவும், மதுக்கடைகளை காலை காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here