கோவேக்சினின் விண்ணப்பத்தை ஏற்ற உலக சுகாதார நிறுவனம்!!

0
16

உலக அளவில் கொரோனா பாதிப்பு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திவருகிறது. கொரோனா பாதிப்பை முழுவதும் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசியை செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு நாடுகளும் தங்களது நாடுகளில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை பயன்படுத்திவருகின்றன. இந்தியாவில் ஐ.சி.எம்.ஆருடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசியையும், அஸ்ராஷெனிகா நிறுவனத்துடன் இணைந்து சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற தடுப்பூசியையும் தயாரித்துள்ளது. அதில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவேக்சினுக்கு அந்த அனுமதி வழங்கப்படவில்லை.

அதே நேரத்தில் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் எப்.டி.ஏ அமெரிக்காவில் கோவேக்சின் தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு அனுமதியை தர மறுத்துவிட்டது. நிரந்தர பயன்பாட்டு உரிமத்துக்கு கூடுதல் தரவுகளை அனுப்புமாறு கூறி விட்டது.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் அவசர கால பயன்பாட்டு பட்டியலில் கோவேக்சின் இடம்பெறுவதற்காக பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இந்த அங்கீகாரம் கிடைத்தால், கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் பிற நாடுகளுக்கு செல்ல முடியும், மீண்டும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியதில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி உலகமெங்கும் அவசரகால பயன்பாட்டுக்கு வழிபிறக்கும். இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் விண்ணப்பத்தை பரிசீலிப்பதற்கு உலக சுகாதார அமைப்பு ஏற்றுக்கொண்டு விட்டது.

இந்த தடுப்பூசி தொடர்பான முழுமையான ஆய்வு கூட்டத்துக்கு முந்தைய முதல் கட்ட கூட்டத்தை வரும் 23-ந்தேதி நடத்தவும் உலக சுகாதார அமைப்பு முன்வந்துள்ளது.

இந்த கூட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசி பற்றிய விரிவான விளக்கம் அளிப்பதற்கு வாய்ப்பு இருக்காது. இருந்தபோதிலும், அதன் ஒட்டுமொத்த தரம் பற்றிய சுருக்க அறிக்கையை சமர்ப்பிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே, கோவேக்சின் தடுப்பூசியானது, உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டு பட்டியலில் ஜூலை-செப்டம்பரில் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்ப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த மாதம் கூறியது.

உலக சுகாதார அமைப்பின் அவசர கால பயன்பாட்டு பட்டியலில் கோவேக்சின் தடுப்பூசி இடம்பிடிப்பதற்கு 90 சதவீத ஆவணங்களை சமர்ப்பித்து விட்டதாக மத்திய அரசிடம் பாரத் பயோடெக் நிறுவனம் கூறியது.

எஞ்சிய ஆவணங்களை இந்த மாதத்திற்குள் உலக சுகாதார அமைப்பிடம் சமர்ப்பிப்பதாகவும் மத்திய அரசிடம் பாரத் பயோடெக் கூறி உள்ளது. உலக சுகாதார அமைப்பின் அவசர கால பயன்பாடு பட்டியலில் கோவேக்சின் இடம் பிடித்துவிட்டால் அது ஒரு சர்வதேச அங்கீகாரம் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here