இரவு ஊரடங்கு நாட்களில் பேருந்து போக்குவரத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள்!!

0
12

தமிழ்நாடு அரசு விதித்துள்ள இரவு நேர ஊரடங்கினை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நாளை முதல் ஏப்ரல் 20 முதல் பகல் நேரங்களில் இயக்கப்படும் என போக்குவரத்து மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கோவிட் நோய் தொற்று பரவுவதை தடுத்திட மத்திய அரசு வழிக்காட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் ஊரடங்கு உத்தரவு, கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளும் அமுலில் இருந்து வருகிறது.

கொரோனா நோய் பரவல் நிலை தற்பொழுது அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்துகின்ற வகையில், நாளை (20.04.2021) செவ்வாய்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கினை அமுல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவில், இரவு நேரங்களில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவையும் இயங்கிட அனுமதி இல்லை. மேலும், பகல் நேரங்களில் இயக்கப்படுகின்ற பேருந்து சேவைகளில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலைத் தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்றுமாறும் அறிவுத்தப்பட்டுள்ளது.

அரசு விதித்துள்ள இரவு நேர ஊரடங்கினைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு வசதியாக சென்னையிலிருந்து குறுகிய மற்றும் தொலைதூர ஊர்களுக்கும், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கும் இயக்கப்படுகின்ற பேருந்துகளானது, அதிகாலை 4.00 மணி தொடங்கி இரவு 8.00 மணிக்குள்ளாக சென்றடைகின்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரசு விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், அன்றைய தினம் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. இந்த வசதியினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு உரிய வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள், தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பயணத் தேதியை மாற்றி அமைத்துக்கொள்ள ஏதுவாக, அருகே உள்ள பேருந்து நிலைய கட்டுப்பாட்டு அலுவலகத்தை அனுகி தகுந்த மாற்று ஏற்பாடு செய்து கொள்ளலாம். அப்படி இல்லாத பட்சத்தில் அக்கட்டணத் தொகையானது திருப்பி வழங்கப்படும்.

தளவழி முன்பதிவு செய்த பயணிகள் தளவழி மூலமாக பயணக்கட்டணத்தை திரும்பப்பெற வசதி செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமையில் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கும் மேற்குறிப்பிட்ட நடைமுறையே பின்பற்றப்படும்.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தைப் பொறுத்தமட்டில், பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், அரசு விதித்துள்ள இரவு ஊரடங்கினை பின்பற்றி அதிகாலை 4.00 மணி தொடங்கி இரவு 10.00 மணி வரையிலும், பேருந்துகள் இயக்கப்படும்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here