நடிகர் | அலெக்சாண்டர் ஸ்கார்ஸ்கர்ட் |
நடிகை | மில்லி பாபி பிரவுன் |
இயக்குனர் | ஆடம் விங்கார்ட் |
இசை | டாம் ஹோல்கன்போர்க் |
ஓளிப்பதிவு | பென் செரெசின் |
படம் ஆரம்பத்தில் காட்ஸில்லா, ஒரு ஆய்வு கூடத்தை தாக்குகிறது. காட்ஸில்லா ஒரு விஷயத்தை செய்தால் அதில் காரணம் இருக்கும் என்று ஒரு குழு கூறுகிறார்கள். இதை ஏற்காத மற்றொரு குழு, காட்ஸில்லா மக்களை தாக்காது. வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
காட்ஸில்லாவின் தாக்குதலை நிறுத்த, காங்-கை அழைக்கிறார்கள். காட்ஸில்லா – காங் இரண்டும் மோதிக்கொள்கிறது. இறுதியில் காட்ஸில்லாவின் தாக்குதலை காங் நிறுத்தியதா? இருவருக்கும் நடந்த மோதல் என்ன ஆனது? காட்ஸில்லா மக்களை தாக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் ஆரம்பத்தில் எழும் கேள்விகளுக்கு எதிர்பாராத சில ட்விஸ்ட்களை வைத்து ஒரு ஆக்ஷன் மசாலாவை கொடுத்திருக்கிறார்கள். பிரம்மாண்டமாக இருக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. காட்ஸில்லாவும், காங்கும் மோதிக்கொள்ளும் ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டம். முதல் சண்டைக்காகச் சிறிது நேரம் நம்மைக் காக்க வைத்தாலும், நடுக்கடலில் இரண்டு ராட்சச உயிரினங்களுக்கு இடையே நிகழும் அந்த யுத்தம், தொழில்நுட்பத்தின் உச்சம்.
பழங்குடியின குட்டிப்பெண், இந்தக் குட்டிப்பெண்ணை வளர்க்கும் நடிகை ரெபெக்கா ஹால், மில்லி பாபி பிரவுன் ஆகியோர் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். ரசிகர்கள் எதிர்பார்த்த அனைத்தையும் கொடுத்து இருக்கிறார் ஆடம் விங்கார்ட். காட்ஸில்லா, காங் காட்சிகள் தவிர மற்ற காட்சிகள் வரும் போது சற்று சோர்வை ஏற்படுத்துகிறது.
பென் செரெசின் ஒளிப்பதிவும், டாம் ஹோல்கன்போர்க்கின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘காட்ஸில்லா vs காங்’ பிரம்மாண்டம்.