செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 6000 கன‌அடியாக உயர்வு.. i

0
22

செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறக்கப்படும் கால்வாய் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது 3,000 கன அடியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது 10 மணி அளவில் 4000 கன அடியாக உபரி நீர்திறக்கப்பட உள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கும் முகாம்களுக்கு செல்லவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

‘நிவர்’ புயல் காரணமாக பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. 24 அடி உயரம் கொண்ட ஏரியில் 22 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு அதிகரித்ததால் ஏரியின் பாதுகாப்பு கருதி கடந்த 25-ந்தேதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது. 6 நாட்களாக திறந்துவிடப்பட்ட உபரிநீர், கடந்த 30-ந்தேதி முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் உருவான ‘புரெவி’ புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. அதன் காரணமாக ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைபாக்கம் ஏரிகள் நிரம்பின. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரித்தது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி ஏரிக்கு 1,050 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் 22.23 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3,179 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. சென்னை குடிநீருக்காக 966 கன அடி நீர் திறக்கப்பட்டது.
ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாலும், மேலும் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை 22 அடியிலேயே வைத்துக்கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி முதல் கட்டமாக நேற்று மதியம் 12 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மீண்டும் 2-வது முறையாக 5 கண் மதகு வழியாக 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைபாக்கம் ஏரிகள் நிரம்பி வருகின்றன. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரித்தது. கனமழையால் ஏரிக்கு நீர்வரத்து 6000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனையொட்டி சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 573 கன அடியில் இருந்து 3000 கன அடியாக அதிகரித்துள்ளது. 10 மணியளவில் மேலும் 1000 கன அடிநீர் திறக்கப்படவுள்ளது.
காவனூர், குன்றத்தூர், நத்தம், திருமுடிவாக்கம், திருநீர்மலை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் இருந்து காலை 10 மணிக்கு தண்ணீர் திறக்கபட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. புழல் ஏரியின் மொத்த அடியான 21 அடியில் நீர்மட்டம் 19.2 அடியை எட்டியதால் உபரி நீர் திறக்கப்படுகிறது. புழல் ஏரிக்கு விநாடிக்கு 1000 கன அடி என தண்ணீர் வரும் நிலையில் 1000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here