முதல் சர்வதேச போட்டியில் 2 விக்கெட்டை வீழ்த்தி அபாரம்!!

0
30

சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தனது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இரண்டு விக்கெட்டை வீழ்த்திய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து  தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. ஒருநாள் போட்டியில் முதல் முறையாக களமிறங்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன்  சர்வதேச போட்டியில் 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்நிலையில், களமிறங்கிய முதல் சர்வதேச போட்டியிலேயே 2 விக்கெட்டை வீழ்த்திய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்,  தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அமைச்சர்கள், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன்  துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று காலை பதிவிட்ட வாழ்த்து செய்தியில், கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக தனது முதல் வெற்றிப்பயணத்தை துவங்கியிருக்கும் தமிழக வீரர் திரு.நடராஜன்  அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! தனது அபாரத் திறமையால் தாய்நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும். அவர்களின் சாதனைப்பயணம் தொடரட்டும்! என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், #TeamIndia கிரிக்கெட் அணிக்காக விளையாடி ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி  சர்வதேசப் போட்டிகளுக்கான விக்கெட் கணக்கைத் தொடங்கியிருக்கும் தமிழக வீரர் @Natarajan_91 அவர்களுக்கு வாழ்த்துகள்! வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும்! என்று குறிப்பிட்டுள்ளார்.


தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நம் பாரத திருநாட்டிற்காக  தன்னுடைய திறமையான பந்துவீச்சால் முதல் போட்டியில் இரண்டு விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்து மேலும் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை வெற்றியுடன் துவக்கி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த கிரிக்கெட் வீரர் திரு.நடராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு நம் பாரத தேசத்திற்காக மென்மேலும் பல சாதனைகளை படைத்து நம் இந்திய மண்ணிற்கு பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். @Natarajan_91 என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனைபோல், தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு ஆதரவாகவும், வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும் டுவிட்டரில் இணையவாசிகள் #TNatarajan என்ற ஹெஷ்டெக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here