தமிழக ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு, அரிசி, கோதுமை இலவசமாகவும்,சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன.
ஊரடங்கால்,ஏப்ரல் முதல் இம்மாதம் வரை, அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன.மத்திய அரசும், ரேஷனில் ஏற்கனவே வழங்கும் அரிசியுடன், ஏப்ரல் முதல் ஜூன் வரை, கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும், கூடுதலாக, தலா 5 கிலோ அரிசியை இலவசமாக வழங்க, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. அந்த திட்டம், நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ‘அரிசி கார்டுதாரர்களுக்கு, ஏப்ரல் முதல் ஜூன் வரை வழங்கப்பட்ட, கூடுதல் அளவிலான அரிசி, நவம்பர், வரை இலவசமாக வழங்கப்படும்’ என தமிழக அரசு, இம்மாத துவக்கத்தில் அறிவித்தது. இம்மாதமும், சர்க்கரை, பருப்பு, பாமாயில் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு, 3ம் தேதி வெளியானது.
அந்த விபரம் தெரியாத, 5 சதவீதத்திற்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள், 1, 2ம் தேதிகளில், அவற்றை பணம் கொடுத்து வாங்கினர்.இந்நிலையில், அடுத்த மாத பொருட்கள் வினியோகம், நாளை மறுதினம் துவங்குகிறது.
இம்மாதம் ஏற்பட்டது போல், அடுத்த மாதமும், சர்க்கரை, பருப்பு, பாமாயில் வினியோகத்தில் குழப்பம் ஏற்படாமல் இருக்க வேண்டும்.
இந்த பொருட்கள் இலவசமாக வழங்கப்படுமா அல்லது பணம் கொடுத்து வாங்க வேண்டுமா என்ற அறிவிப்பை அரசு, நாளைக்குள் தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.