சைக்கோ சினிமா விமர்சனம்

0
236
நடிகர்கள்: உதயநிதி ஸ்டாலின்,அதிதி ராவ் ஹைதரி,நித்யா மேனன்,ராம்
இயக்கம்: மிஷ்கின்

கோவையில் இளம் பெண்களை கடத்தி ஒரு சைக்கோ கொலை செய்ய அதை கண்டுபிடிக்க முடியாமல் அல்லாடுகிறார்கள் போலீசார். இந்நிலையில் பார்வையற்றவரான உதயநிதி ஸ்டாலினுக்கு எஃப்.எம். ரேடியோவில் வேலை செய்யும் அதிதி ராவ் ஹைதரி மீது காதல்.

அதிதி தன்னை சந்திக்க ஒரு இடத்திற்கு வருமாறு தன் எஃப்.எம். நிகழ்ச்சி மூலம் உதயநிதிக்கு க்ளூ கொடுக்கிறார். அங்கு வந்தால் காதல் பற்றி பார்க்கலாம் என்கிறார். அந்த இடத்தை கண்டுபிடித்து உதயநிதி அங்கு செல்ல சைக்கோ கொலைகாரன் அதிதியை கடத்திவிடுகிறார். இதையடுத்து உதயநிதி போலீசாலேயே கண்டுபிடிக்க முடியாத சைக்கோவை நித்யா மேனனின் உதவியோடு கண்டுபிடிக்கிறார்.

மாற்றுத்திறனாளியாக உதயநிதி அழகாக நடித்திருக்கிறார். வில்லன் ராஜ் சைக்கோ கொலைகாரனாக அம்சமாக நடித்திருக்கிறார். சைக்கோவாகவே மாறியிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். அதிதி ராவ் ஹைதரி தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். உதயநிதி மீது முதலில் கோபப்படுவது, பின்னர் காதலிப்பது, சைக்கோவிடம் சிக்கி அவர் கொலை செய்வதை பார்த்து பயந்து, பதறி அழுவது, சைக்கோவிடம் சவால்விடுவது ஆகிய காட்சிகளில் தனித்து தெரிகிறார் அதிதி.

விபத்தால் கழுத்திற்கு கீழ் உணர்ச்சி இல்லாத நித்யா மேனன் சைக்கோவை கண்டுபிடிக்க உதவும் காட்சிகளில் அசத்துகிறார். படத்திற்கு பெரிய பலங்கள் என்றால் அது ஒளிப்பதிவும், இசையும். மிஷ்கின் காட்சிகளால் நம்மை மிரட்டினால், இளையராஜா அவர் பங்கிற்கு தன் அபார இசையால் மிரட்டுகிறார். மனிதர் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார். இயக்குநர் ராம், ரோகிணி, சிங்கம் புலி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

ரத்தம் தெறிக்கும் காட்சிகள் அதிகம். அது படத்திற்கு தேவை தான் என்றாலும் பெண்கள், குழந்தைகளால் பார்க்க முடியாதபடி உள்ளது. படத்தில் சில இடங்களில் லாஜிக்கே இல்லை. போலீசாரால் கண்டே பிடிக்க முடியாத சைக்கோ கொலைகாரனை உதயநிதி எளிதில் கண்டுபிடிக்கிறாராம்.

ராஜ் எதற்காக சைக்கோவாக மாறினார் என்கிற விளக்கம் அழுத்தமாக இல்லை. கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்திய மிஷ்கின் திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார்.

நல்ல கதை தான் ஆனால் திரைக்கதை சரியில்லை. திரைக்கதையும் நல்லபடியாக அமைந்திருந்தால் இந்த சைக்கோ வேற லெவலாக இருந்திருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here