தமிழக முதல்வர் பழனிசாமி 500 புதிய அரசுப் பேருந்துகளை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவும் வகையில் ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஹைலைட்ஸ்
- புதிதாக அரசு பேருந்துகளை தொடங்கி வைத்த தமிழக முதல்வர்
- ஏராளமான அம்சங்களுடன் விரைவில் இயக்கம்
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அரசுப் பேருந்துகளை முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சேலம் – 60, கும்பகோணம் – 25, விழுப்புரம் – 18, கோவை – 16, மதுரை – 14, நெல்லை – 14 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பயணிகள் எளிதில் ஏறி, இறங்கும் வண்ணம் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்ட அகலமான கதவுகள் மற்றும் படிக்கட்டுகள் இடம்பெற்றுள்ளன.
பயணிகள் அமர்வதற்கு தனித்தனி இருக்கைகள் உள்ளன. பயணிகள் இறங்கும் இடத்தை அறிவிக்கும் ஒலிபெருக்கி வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மின்னணு திரையும் இடம்பெற்றுள்ளது.
இருபுறமும் அவசர கால வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் கொண்டு வரும் கைத்தடிகளை வைக்க, சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கழிப்பறை வசதி மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய அரசு விரைவுப் பேருந்துகளும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.