சிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை

0
1099

இதய நோய் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வொன்றை நடத்தியது. அதில் மனஅழுத்தம், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதயச் செயல்பாடு பாதிக்கப்படுவதுடன் இளம் வயதிலேயே மரணம் நிகழ்வது கண்டறியப்பட்டது. மேலும், தூக்கமின்மையும் இளைஞர்களைப் பெருமளவு பாதிப்பது தெரியவந்துள்ளது.

உடல் இயக்கத்துக்கு அடிப்படையாக இருப்பது இதயம். வாழ்வியல் மாற்றங்களால் அதன் செயல்திறன் பாதிக்கப்படும்போது, உடலின் அனைத்து உள்ளுறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகும். இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தே ஒருவரது ஆயுள்காலம் அமையும் என்பதால், இந்த ஆய்வு முடிவு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கிறது. ‘இளம் தலைமுறை இதய நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்’ என்று அந்த ஆய்வின் முடிவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்ஜெனிட்டல் எனும் இதய கோளாறு

மரபு காரணமாக மட்டுமே இவை ஏற்படுகின்றன. பிறவிக் குறைபாடு என்பதால் இதை முன்கூட்டியே தடுப்பது சாத்தியமற்றது. முழுமையாகக் குணப்படுத்தவும் வாய்ப்பில்லை. வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் சாப்பிட வேண்டும். பிரச்னையின் வீரியத்துக்கு ஏற்ப, வெவ்வேறு காலகட்டத்தில் அறிகுறிகள் தெரியத்தொடங்கும். பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயே தெரியத் தொடங்கிவிடும். அதிகபட்சம், 30 வயது வரை அறிகுறிகள் தெரியலாம். அறிகுறி எந்த வயதில் தெரிகிறதோ, அப்போதே சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.

அக்கொயர்ட் எனும் இதய கோளாறு

சீரற்ற உணவுமுறை, தூக்கமின்மை, மது மற்றும் புகைப்பழக்கம் போன்ற முறையற்ற வாழ்வியல் பழக்கங்களால் ஏற்படும் பாதிப்பு இது. மேலும், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், உடல்பருமன், உடல் எடை பி.எம்.ஐ-க்கு உட்படாமல் இருப்பது போன்ற சூழலிலும் இதயப் பிரச்னைகள் ஏற்படலாம். எதுவாக இருந்தாலும், இதயப் பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிந்து, அதைச் சரிசெய்வதன் மூலம் இதிலிருந்து விடுபடலாம். கடைசி நிலையில் பிரச்னையைக் கண்டறிந்தால் சரிசெய்வது கடினம்.

ஆரோக்கியமான வாழ்வியல் வழிமுறைகளைப் பின்பற்றுவதன்மூலம் அக்கொயர்ட் வகை இதயப் பிரச்னைகளை எளிதாகத் தடுக்கலாம். ஆனாலும், நம்மில் பலர் அதற்காக மெனக்கெடுவதில்லை. முன்பெல்லாம் 50, 60 வயதுகளில் ஏற்பட்டு வந்த இதயப் பிரச்னை இப்போது 30 வயதிலேயே ஏற்பட்டுவிடுகிறது. எனவே, அனைத்து வயதினரும் இதய நலனில் கவனமாக இருக்க வேண்டும். அறிகுறிகளைக் கண்டுகொள்ளாமல் விடும்போது, அவை தீவிரமடைந்து ரத்தக்குழாயில் கொழுப்புச்சத்து சேர்ந்து, ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்படும். காலப்போக்கில், மாரடைப்பு ஏற்படலாம். இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புக்கான காரணங்களில், மாரடைப்புக்குத்தான் முதலிடம்.

இதனை தடுக்க சில வழிகள்

* தினமும் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி தேவை.

* இரவு 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் அவசியம். மிகவும் குறைவான வெளிச்சம் இருக்குமிடத்தில் தூங்குவது, ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும்.

* மன அழுத்தம் இல்லாத, மகிழ்ச்சியான வாழ்க்கை.

* குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் நேரம் செலவிட வேண்டும்.

* புகை, மதுப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here