”தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3-ம் நிலைக்கு செல்ல வாய்ப்பு!!

0
55

நோயின் நிலைமையை அனுசரித்துத்தான் ஊரடங்கை நீடிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. நிலைமையை ஆய்வு செய்ய 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 2-ம் கட்ட நிலையில்தான் உள்ளது என்றும், இது 3-ம் நிலைக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நோய்த் தொற்று ஏற்பட்டவர்களை பரிசோதனை செய்வதற்காக அரசின் சார்பில் 12-ம், தனியார் சார்பாக 7-ம் ஆக மொத்தம் 19 ஆய்வகங்கள் செயல்படுகிறது.

இன்றைய தேதிவரை 6,095 பேருக்கு ஆய்வக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 738 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உள்ளது. இன்னும் 344 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டும். 21 பேர் தொற்று குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

அரசின் கைவசம் மும்மடிப்பு, N95 முக கவசங்கள், பாதுகாப்பு உடைகள், ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகள், சானிடைசர்கள் போதுமான அளவு உள்ளன. 2,500 வென்ட்டிலேட்டர்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் வாங்க ஆர்டர் செய்துள்ளோம். இன்று 50 ஆயிரம் டெஸ்ட் கிட்டுகள் வந்து விடும். தமிழகத்தில் 3,371 வென்டிலேட்டர்கள் உள்ளன. 32,371 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன. எனவே தமிழகத்தை பொருத்தவரை யார் நோய்வாய்ப்பட்டாலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

விதிகளை மீறி வாகனத்தில் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ. 40 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. 8-ம்தேதி மட்டும் 2 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இன்றைக்கு வேளாண்மை மற்றும் உள்ளாட்சித்துறைகளால், 3,500 வாகனங்கள் மூலமாக மக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று காய்கறிகள் விற்கப்படுகின்றன. 111 குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை இதில் வைத்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

கிடைக்காத மளிகைப்பொருட்கள் அண்டை மாநிலங்களில் கூட்டுறவுத்துறை மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு, மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

1.94 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ. 1,000 வழங்கப்பட்டுள்ளது. வயது முதியோருக்கு 3 வேளை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதியோர் உதவித்தொகை நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கப்படுகிறது.

அங்கன்வாடியில் 24 லட்சம் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 2-ம் கட்ட நிலையில்தான் உள்ளது. இது 3-ம் நிலைக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளன.

நோயின் நிலைமையை அனுசரித்துத்தான் ஊரடங்கை நீடிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. நிலைமையை ஆய்வு செய்ய 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here