ரேஷன்கடைகளில் ரூ.1000 வழங்க, வீட்டுக்கே டோக்கன் வரும்.. அமைச்சர் அறிவிப்பு

0
17

சென்னை: ரூ.1000 உதவித்தொகைக்கான, டோக்கன் அனைவரின் வீடுகளுக்கும் வந்து தரப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

வைரஸ் பாதிப்பு காரணமாக வேலைக்கு செல்ல முடியாமலும், தொழில் செய்ய முடியாமலும் பொதுமக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று சில தினங்களுக்கு முன்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

நாளை முதல் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம் ஆரம்பிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே நிவாரணத் தொகையை வாங்குவதற்கும், ரேஷன் பொருட்களை வாங்குவதற்கும் ரேஷன் கடைகளில் கூட்டம் அலை மோதும் வாய்ப்பு உருவாகி இருந்தது.

இவ்வாறு கூட்டம் அதிகமாக வந்தால் சமுதாய விலகல் என்ற நோக்கத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும். கொரோனா வைரஸ் பாதிப்பு பரவுவதற்கு, இது வழியை ஏற்படுத்தி விடும் என்ற அச்சம் ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று மாலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை மற்றும் ரேஷன் பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு ரேஷன் கார்டுதாரர்கள் எப்போது வரவேண்டும் என்பதற்கு காலம் வகுக்கப்படும். ஒவ்வொருவரும் அவரவருக்கு குறிப்பிட்ட நேரத்தில்தான் ரேஷன் கடைக்கு செல்லவேண்டும்.

ஒரு ரேஷன் கடையில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 100 பேருக்கு இவ்வாறு வினியோகம் செய்யப்படும். அவரவருக்கு உரிய காலம் எது என்பது பற்றி எழுதப்பட்ட டோக்கன் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யப்படும். அந்த நேர அளவின் போதுதான் ரேஷன் கடைக்கு அவர்கள் செல்லவேண்டும். முண்டியடித்து கூட்டமாக சேரக்கூடாது. இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here