உற்சாக வெள்ளத்தில் இந்திய மகளிர் அணி!

0
127

மகளிர் உலகக் கோப்பை டி20 போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளதால் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விராட் கோலி, சேவாக், விவிஎஸ் லட்சுமணன் போன்ற வீரர்கள் இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட்டில் இந்திய ஆடவர் அணி உலகின் தலை சிறந்த அணியாக இருக்கும் நிலையில் தற்போது இந்திய மகளிர் அணியும் பலமிக்க அணியாக மாறி வருகிறது. நடப்பு மகளிர் உலகக் கோப்பை டி20 போட்டிகளில் இந்திய அணி மட்டுமே ஒரு தோல்வியைக் கூடச் சந்திக்காத அணியாக ஆதிக்கம் செலுத்துகிறது.

பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டது. குரூப் ஏ பிரிவில் இந்திய அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்று முதலிடத்தில் இருந்தது. சிட்னியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்வதாக இருந்தது. ஆனால், மழை குறுக்கிட்டதால் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன்மூலம் இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இந்திய மகளிர் அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் ஷஃபாலி வர்மா மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒருசில போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடித்தந்தார். ஆனால் பந்துவீச்சில் இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாகத் திகழ்கிறது. பந்துவீச்சில் பூனம் யாதவ், ராஜேஸ்வரி, ராதா யாதவ் போன்றோர் எதிரணி பேட்ஸ்மேன்களைத் திணறடித்து வருகின்றனர். ஆல் ரவுண்டர்களான ஷிகா பாண்டேவும், தீப்தி ஷர்மாவும் சிறப்பாகச் செயல்படுகிறனர். இந்திய மகளிர் அணி எவ்விதத்திலும் குறையில்லாமல் முடிந்தளவிற்குச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. எப்படியும் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

வரும் ஞாயிறு அன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது. லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தியிருந்தது குறிப்பிடதக்கது. இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இந்திய மகளிர் அணியைப் பல நட்சத்திரங்கள் வாழ்த்தி வருகின்றனர். விராட் கோலி, விரேந்திர சேவாக், விவிஎஸ் லட்சுமணன் போன்ற வீரர்கள், இந்திய மகளிர் அணி கோப்பையை வெல்ல வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இளம் இந்திய மகளிர் அணி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here