பெங்களூரு அரண்மனை, பெங்களூர்
பெங்களூரின் மையத்தில் உள்ள அரண்மனைப் பூங்காவில் பெங்களூர் அரண்மனை என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை அமைந்துள்ளது. சதாசிவ நகருக்கும் ஜயமஹாலுக்கும் இடையில் இது இருக்கிறது. 1862ம் ஆன்டு இங்கிலாந்திலுள்ள விண்ட்ஸர் கோட்டையைப் போன்றே உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ரெவரெண்ட் காரட் என்பவரால் இது கட்ட ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இது அப்போதைய ராஜாவான உடையார் வம்சத்தை சேர்ந்த சாமராஜ உடையாரால் 1884ம் ஆண்டு வாங்கப்பட்ட்து. 45,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த அரண்மனையை கட்டி முடிக்க 82 வருடங்கள் ஆயின. இந்த அரண்மனையின் அழகு மிக பிரசித்தி வாய்ந்தது. அரண்மனை வாசல் வழியாக நுழையும்போதே இது உங்களை பிரமிக்க வைத்து விடும். வேறு எதைப்பற்றியுமே நினைக்க விடாமல் அதன் அழகு உங்களை மெய் மறக்க வைக்கும் இயல்புடையது. சமீபத்தில் இந்த அரண்மனையில் புதுப்பிப்பு வேலைகள் முடிந்துள்ளன.இந்த அரண்மனை உட்புறமானது ஐரோப்பிய ‘தூடர்’ (tudor) பாணி கட்டிடக்கலை முறைப்படி வேலைப்பாடுகளை கொண்டுள்ளது. ஆக்ஸ்ஃபோர்டு கேம்பிரிட்ஜ் போன்றவற்றில் இது போன்ற கட்டிடக்கலை பாணி அம்சங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த அரண்மனையின் கீழ் தளத்தில் உள்ள திறந்த வெளி முற்றத்தில் நீல நிற பீங்கான் ஓடு பதிக்கப்பட்டுள்ள கிரானைட் கல்லால் ஆன இருக்கைகள் அமைந்துள்ளன. இரவில் இந்த நீல நிற பீங்கான் இருக்கைகள் ஒளிர்வது போன்று தோற்றமளிக்கும் அழகு அற்புதமான ஒன்றாகும். மேல் தளத்தில் பிரம்மாண்டமான தர்பார் ஹால் காணப்படுகிறது. ராஜா தன் அவையினருடன் கலந்தாலோசித்த இடமாக இது அறியப்படுகிறது. அரண்மனையின் உட்புற சுவர்களில் கிரேக்க மற்றும் டச்சு ஓவியங்களும் புகழ் பெற்ற இந்திய ஓவியரான ராஜா ரவி வர்மாவின் ஓவியங்களும் காணப்படுகின்றன. இந்த தொன்மை வாய்ந்த ஓவியங்கள் அரண்மனையின் அழகை மேலும் மெருகூட்டுகின்றன.
கமர்ஷியல் தெரு, பெங்களூர்
பெண்களுக்கான ஆடைகள் அதிக அளவில் பல வகைகளில் இங்கு கிடைக்கின்றன. இங்குள்ள கடைகள் காலை 10.30 அளவில் திறக்கின்றன.பிளாஸ்டிக் பணம் என்று அழைக்கப்படும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவை இங்கு பயன்படாது என்பதால் கையில் நிறைய பணம் வைத்திருப்பது அவசியம். அசராமல் பேரம் பேசி தடாலடியாக பொருட்களை வாங்க கூடிய ஒரு விதமான நாசூக்கில்லாத மனோநிலைக்கு நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்வதும் அவசியம். பெரும்பாலும் இந்த ஷாப்பிங் தெருவில் முழுக்க முழுக்க பெண்களின் சாம்ராஜ்யம் என்றாலும் துணைக்கு வரும் ஆண்களுக்கு அலுப்பு தெரியாமல் இருக்க சாலையோர டீக்கடைகள் மற்றும் ரெஸ்டாரெண்டுகள் இங்கு உள்ளன. சுத்தமான அல்லது நவீன உணவு விரும்புவர்களுக்கு கே எஃப் சி மற்றும் பீட்ஸா ஹட் போன்ற உணவகங்களும் இந்த தெருவில் உள்ளன. ஒரு நாள் முழுக்க இந்த தெருவில் சுற்றி ஷாப்பிங் மற்றும் பேரத்தில் ஈடுபட்டு தெருவோரக்கடைகளிலும் சுவாரஸ்யமாக எதையாவது சாப்பிட்டுவிட்டு பொழுதைக்கழித்து திரும்பும்போது நிச்சயம் உங்களுக்கு களைத்துப் போய்விடும். இருந்தாலும் திரும்பவும் இங்கு வருவதற்கு ஆசைப்படுவீர்கள். அதுதான் இந்த கமர்ஷியல் தெருவின் விசேஷம்.
லால் பாக்

இன்னோவேடிவ் பிலிம் சிட்டி, பெங்களூர்
பெங்களூர் – மைசூர் மாநில நெடுஞ்சாலை SH-17 ல் வொண்டர் லா அமைந்திருக்கும் இடத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் இந்த இன்னோவேடிவ் சிட்டி அமைந்துள்ளது. பெயருக்கேற்றபடி இது இந்தியாவில் உள்ள தீம் பார்க்’குகளில் பல நூதனமான இயல்புகளுடன் காணப்படுகிறது. குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கும் ஏற்ற கேளிக்கை அம்சங்களை இது கொண்டுள்ளது. ஒரு முழு நாளையும் இங்கு குடும்பத்துடனும் நண்பர்களுடனும் கழிப்பது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். பெங்களூரிலிருந்து சாலைவழியாக செல்லும்படி அமைந்துள்ள இந்த பொழுதுபோக்கு ஸ்தலம் காலை 10மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை திறந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட விளையாட்டுகளுக்கு மட்டும் ஒரு நபருக்கு 299 ரூபாயும் எல்லா விளையாட்டுகளுக்காகவும் எனில் நபர் ஒருவருக்கு 499 ரூபாயும் இங்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு இன்னோவேடிவ் ஸ்டுடியோ, ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் மியூசியம், 4D தியேட்டர், குழந்தைகள் குகை, லூயி டஸ்ஸாட் மெழுகு மியூசியம் மற்றும் தீம் ரெஸ்டாரண்டுகள் அமைந்துள்ளன. வான்னடோ சிட்டி எனும் குழந்தைகளுக்கான தீம் விளையாட்டு இங்கு மிகவும் புதுமையான ஒன்றாக உள்ளது. இங்கு குழந்தைகள் நிஜமான சூழலில் அவர்கள் விரும்பும் கதாபாத்திரமாக மாறி விளையாடுவதற்கான வசதிகள் உள்ளன. டைனோசார் வேர்ல்டு பகுதியில் திகிலூட்டும் வகையில் அமைந்த ஜூராசிக் ஜீவராசிகளின் தத்ரூப மாடல்கள் உள்ளன. திகில் மாளிகை (ஹான்டட் மேன்ஷன்) எனும் விளையாட்டுப்பகுதியும் சுவாரசியமாக உள்ளது. இது தவிர மினியேச்சர் சிட்டி எனும் பிரிவில் உலக அதியங்கள் மற்றும் முக்கியமான இடங்களின் த த்ரூப மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தீம் ரெஸ்டாரண்டுகளில் சாப்பிடுவதும் ஒரு தனி அனுபவமாக விளங்கும்படி அமைத்துள்ளனர்.
வொண்டர் லா(wonderla)
பெங்களூரிலிருந்து 28 கி.மீ தொலைவில் பிடதி அருகில் வீ-கார்டு குரூப் நிறுவனத்தால் நடத்தப்படும் கேளிக்கை பூங்கா வொண்டர் லாஆகும். 82 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த கேளிக்கைப்பூங்கா பெங்களூர் மைசூர் நான்கு வழிச் சாலையில் 1 மணி நேரப்பயணத்தில் அமைந்துள்ளது. நிலம் மற்றும் நீரில் அமைந்த 53 வகையான கேளிக்கை சவாரி வகைகள் இங்கு காணப்படுகின்றன. மேலும் இந்த பூங்காவில் இசை நீரூரற்று, லேசர் ஷோ, வர்ச்சுவல் ரியலிட்டி ஷோ, எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தக்கூடிய ஷவர்களுடன் கூடிய நடன மேடை போன்றவையும் உள்ளன. 1000 பார்வையாளர்கள் அமரக்கூடிய கூட்ட அரங்கு, 1150 பேர் உட்காரக்கூடிய 5 ரெஸ்டாரெண்டுகள் இவற்றுடன் உடைமகளை வைப்பதற்கான 2350 லாக்கர்களும் இங்கு உள்ளன. OHSAS 18001:2007 எனும் சர்வதேச பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றும் இரண்டு கேளிக்கை பூங்காக்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள5 நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து சுத்தம் செய்யப்பட்ட நீர் இங்கு பயன்படுத்தப்படுவது நீர் தரக்கட்டுப்பாட்டு மையத்தின் சோதனைகள் மூலம் உறுதி செய்யப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் இங்கு வரிசையாக மரங்கள் நடப்பட்டு மழை நீர் சேகரிப்பும் செய்யப்பட்டு நீர் தேவைகளுக்கு பயன்படுத்த்ப்படுகிறது. இங்குள்ள சவாரிகளின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி உங்கள் மனதில் சந்தேகங்கள் பயங்கள் இருந்தாலும் அவை யாவுமே இங்கு வந்து பார்க்கும்போது மறையும் அளவுக்கு வொண்டர் லாவின் பாதுகாப்பு அம்சங்கள் காணப்படுகின்றன.
கப்பன் பார்க்
மந்திரி ஸ்கொயர் மால்
பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியில் M.N காம்ப்ளக்ஸுக்கு அருகில் புகழ் பெற்ற சம்பிகே ரோடில் இந்த மந்திரி ஸ்கொயர் எனும் ஷாப்பிங் மால் (அடுக்குமாடி ஷாப்பிங் சென்டர்) அமைந்துள்ளது. 15 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த மால் இந்தியாவிலேயே பெரியது என்று சொல்லலாம். சர்வதேச நகரம் என்ற பெருமையை பெங்களூருக்கு தரும்படியாக இந்த பிரம்மாண்ட ஷாப்பிங் மாலில் எல்லா பொழுதுபோக்கு அம்சங்களும், ஷாப்பிங் அம்சங்களும் உணவக வசதிகளும் நிரம்பி காணப்படுகின்றன. பெங்களூர் நகரத்திலேயே ஐந்து பிரபல டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் ஒரே மாலில் இருக்கிறது என்று சொல்லும்படியாக இது ஷாப்பர்ஸ் ஸ்டாப், லைஃப்ஸ்டைல், ரிலையன்ஸ், மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர், பாண்டலூன்ஸ் போன்ற நிறுவனங்களின் ஷோரூம்களை கொண்டுள்ளது. மந்த்ரி ஸ்கொயர் மால் அதன் தனித்தன்மையான கட்டிடக்கலை வடிவமைப்பை பென்டல் அசோசியேட்ஸ் எனும் தென்னாப்பிரிக்க கட்டுமான நிறுவனத்தின் மூலம் உருவாக்கியுள்ளது. இதனுள் 250 உள்நாட்டு மற்று வெளிநாட்டு பிராண்டுகளின் கடைகள் உள்ளன. இங்குள்ள ஃபுட் கோர்ட் (உணவகம்) 39 வகையான உணவு வகைகள் மற்றும் பானங்களை கொண்டுள்ளது. 4 பிரத்யேக ரெஸ்டாரண்டுகளும் இங்கு உள்ளன. இது தவிர சினிமா காட்சிகளுக்கென்று கோல்டு கிளாஸ் ஸ்கிரீன் மற்றும் 71 இருக்கைகளைக் கொண்ட ஐனாக்ஸ் திரையரங்கம் 6 திரைகளுடன் இங்கு அமைந்துள்ளது. 2000 கார்களை நிறுத்தும் அளவுக்கு இடவசதி கொண்ட இந்த மாலில் வாலெட் பார்க்கிங் வசதி உள்ளது. குதூகலம், பொழுதுபோக்கு, ஷாப்பிங், உணவு, சினிமா என்று பல அம்சங்களை மந்த்ரி ஸ்கொயர் மால் ஒரே இடத்தில் வழங்குகிறது.