பொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா?-

0
80

பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழா நாளை தொடங்குகிறது. போகியில் தொடங்கி தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் வரை தமிழர்களின் இல்லம் 4 நாட்கள் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

நடப்பாண்டில் 14(செவ்வாய்), 15(புதன்), 16(வியாழன்), 17(வெள்ளி) ஆகிய நாட்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை உற்சாகமாக கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

நடப்பாண்டில் அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். ஆனால் உள்ளாட்சி தேர்தல் காரணமாக வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கும் பணிகள் தொடங்கின. இதில் ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
இதற்காக ரூ.2,363 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. மாநிலம் முழுவதும் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தினசரி 300 பேர் வரை பொங்கல் பரிசு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை வாங்கிய உடன் குடும்ப அட்டைதாரர்களின் செல்போனுக்கு அதற்கான எஸ்.எம்.எஸ் வந்துவிடும்.

இந்த சூழலில் பொங்கல் பரிசு வழங்கும் பணிகள் இன்றுடன் நிறைவு பெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை வரை 94.71 சதவீதம் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு பெற்றுக் கொண்டதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இன்று மாலைக்குள் 10 லட்சத்து 59 ஆயிரத்து 745 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றும் கூறினார். இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ள வரும் ஜனவரி 21ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here