தம்பி சினிமா விமர்சனம்

0
103
நடிகர்கள் கார்த்தி,ஜோதிகா,சத்யராஜ்,நிகிலா விமல்
இயக்கம் ஜீத்து ஜோசப்

பார்வதி(ஜோதிகா) வீட்டை விட்டு ஓடிப் போன கோபக்கார தம்பி சரவணன் திரும்பி வருவார் என்று 15 ஆண்டுகளுக்கு மேலாக நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். அவர் மட்டும் அல்ல அவரின் அரசியல்வாதி தந்தை ஞானமூர்த்தி (சத்யராஜ்), அம்மா(சீதா), பாட்டி(சௌகார் ஜானகி) ஆகியோரும் சரவணன் வருவான் என்று நம்புகிறார்கள்.

சத்யராஜ் கோவாவில் சுற்றுலா கைடாக இருக்கும் பக்கா ஃபிராடு விக்கி(கார்த்தி) தான் காணாமல் போன தன் மகன் என்று தவறுதலாக நினைத்து வீட்டிற்கு அழைத்து வருகிறார். விக்கி உண்மையில் யார் என்பது தெரியாமல் சத்யராஜ் குடும்பத்தார் மெல்ல மெல்ல அவரை ஏற்றுக் கொள்கிறார்கள். சரவணனின் காதலியான சஞ்சனா(நிகிலா விமல்) சரவணனின் வருகை அறிந்து சந்தோஷப்படுகிறார். ஆனால் வந்திருப்பது விக்கி என்று தெரியாமல் அவரை கொலை செய்ய ஒருவர் திட்டம் தீட்டுகிறார்.

விக்கியை கொலை செய்ய நினைப்பவர் யார், அவர் சதியில் இருந்து ஃபிராடு தப்பிப்பாரா, உண்மையான சரவணன் திரும்பி வந்தால் என்ன ஆகும், அவர் ஏன் வீட்டை விட்டு ஓடினார், இத்தனை ஆண்டுகளாக எங்கிருந்தார் என்று பல கேள்விகள் எழுகின்றது. அதற்கு பதிலும் கிடைக்கிறது.

முதல் பாதி ரொம்பவே சுமாராக உள்ளது. அதை சரி கட்டி படத்தை தூக்கி நிறுத்துகிறது இரண்டாம் பாதி. எதிர்பார்க்காத டுவிஸ்ட்டுகள் படத்திற்கு பெரிய பலம். கார்த்தி ஃபிராடு கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். சத்யராஜ் தன் சிறப்பான நடிப்பால் தியேட்டருக்கு வருபவர்களை கவர்கிறார். ஜோதிகா, சௌகார் ஜானகி ஆகியோரின் நடிப்பு அருமை. இளவரசு, ஆன்சன் பால், ஹரிஷ், பாலா ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். நிகிலா விமல் கதாபாத்திரம் பெயருக்கு இருக்கிறது. கார்த்தி, நிகிலா இடையேயான காதல் ரசிகர்களை கவரவில்லை. கோவிந்த் வசந்தாவின் இசை பக்கபலம்.

டுவிஸ்ட்டுகளை வைத்து ரசிகர்களை கவர்ந்தாலும் தம்பியால் பாபநாசம் அளவுக்கு ஜொலிக்க முடியவில்லை. சஸ்பென்ஸ், த்ரில் வைத்துவிட்டு திரைக்கதையை வேகமாக கொண்டு செல்ல தவறிவிட்டார் ஜீத்து ஜோசப். அப்பா கதாபாத்திரத்தில் சத்யராஜ் தான் நடிக்க வேண்டும் என்று விரும்பியதாக கார்த்தி சொன்னதற்கான அர்த்தம் படத்தை பார்க்கும் போது புரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here