வெஸ்ட் இண்டீஸ் மிரட்டல் வெற்றி: இந்திய பவுலர்கள் படுசொதப்பல்!

0
76

திருவனந்தபுரம்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டி-20 போட்டியில் இந்திய அணி வென்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் போலார்டு முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

துபே அரைசதம்

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துபே (54) அரைசதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் கெஸ்ரிக் வில்லியம்ஸ், ஹேடன் வால்ஸ் ஜூனியர் ஆகியோர் அதிகபட்சமாக 2 விக்கெட் கைப்பற்றினர்.

சிம்மன்ஸ் ருத்ரதாண்டவம்

எட்டக்கூடிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, எவின் லீவிஸ் (40) நல்ல துவக்கல் அளித்தார். அடுத்து வந்த சிம்ரன் ஹெட்மயர் (23) ஓரளவு கைகொடுத்தார். ஒருபுறம் வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்டை பறிகொடுத்தாலும் மறுபுறம் சிம்மன்ஸ் அதிரடி காட்டினார்.

அசத்தல் வெற்றி

இந்திய பந்துவீச்சை மிகச்சுலபமாக சமாளித்த சிம்மன்ஸ், பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பறக்கவிட்டார். இவருக்கு, நிகோலஸ் பூரன் நல்ல கம்பெனி கொடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி வேகமாக வெற்றியை நோக்கி முன்னேறியது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் வெற்றி

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணிக்கு எதிராக கடைசியாக பங்கேற்ற 8 டி-20 போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது. மேலும் டி-20 அரங்கில் இந்திய அணிக்கு எதிராக 170 ரன்களுக்கு மேல் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாவது முறையாக வெற்றிகரமாக சேஸ் செய்தது.

3 ஆண்டுக்கு முன்

இப்போட்டியில் அரைசதம் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் சிம்மன்ஸ், டி-20 கிரிக்கெட்டில் கடைசியாக மூன்று ஆண்டுக்கு முன் கடந்த 2016இல் இந்திய அணிக்கு எதிராக அரைசதம் அடித்திருந்தார். அதற்கு பின் சுமார் 12 இன்னிங்சில் சிம்மன்ஸ் 1 முறை கூட அரைசதம் அடிக்கவில்லை.

12 சிக்சர்கள்

இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் மொத்தமாக 12 சிக்சர்கள் விளாசினர். இதன்மூலம் இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிராக அதிக சிக்சர்கள் விளாசிய அணிகள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இடம் பிடித்தது. ஹைதராபாத்தில் நடந்த முதல் டி-20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிகபட்சமாக 15 சிக்சர்கள் விளாசியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here