பெண் மருத்துவர் கொலை: குற்றவாளிகள் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

0
53

Hyderabad:

தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை எற்படுத்திய நிலையில், எதிர்பாராத திருப்பமாக இந்த சம்பவத்திற்கு காரணமாக குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஐதராபாத்தில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் பெண் கால்நடை மருத்துவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்திற்கு, குற்றவாளிகள் முகமது (26),  ஜோலு சிவா (20), ஜோலு நவீன் (20) மற்றும் சிந்தகுன்டா சேனகேவலு (20) ஆகிய 4 பேரும் இன்று அதிகாலை 3 மணி அளவில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர்.

அப்போது, அதில் ஒருவர் தப்பித்துச்செல்ல மற்றவர்களுக்கு கண்காட்டியதாகவும், உடனடியாக அவர்கள் 4 பேரும் போலீசாரை தாக்கிவிட்டு அவர்களின் ஆயுதங்களை எடுத்து தப்பிச்செல்ல முயன்றதாகவும் அதனால், அவர்களை சுட்டுக்கொன்றதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக கால்நடை பெண் மருத்துவரின் தந்தை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,  இதற்காக காவல்துறை மற்றும் அரசுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மகளின் ஆத்மா இப்போது சாந்தியடையும் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த நவ.28ஆம் தேதியன்று ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் தனது பணியை முடித்து வீடு திரும்பும் வழியில் மாயமாகியுள்ளார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவம் நடந்த அன்று மாலை நேரத்தில் தனது வீட்டில் இருந்து அவசர பணி காரணமாக மருத்துவனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற கால்நடை மருத்துவர் தனது வாகனத்தை சுங்கச்சாவடி அருகே நிறுத்திவிட்டு கால்டாக்சியில் சென்றுள்ளார்.

இதையடுத்து, பணியை முடித்து 9 மணி அளவில் திரும்பி வந்த அவர், தனது இருசக்கர வாகனத்தை எடுத்தபோது, அது பஞ்சர் ஆகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 9.15 மணி அளவில் தனது சகோதரிக்கு அந்த பெண் மருத்துவர் செல்போனில் தொடர்புகொண்டுள்ளார். அப்போது, தனது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனதாகவும், அதனை சிலர் பஞ்சர் பார்த்து தருவதாக கூறி எடுத்துச்சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும், அங்கு சில லாரி ஒட்டுநர்கள் அநாகரிமான முறையில் பார்த்து வருவதாகவும் இதனால், தனக்கு பயமாக இருப்பதாகவும் சகோதரியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சில நிமிடங்களிலேயே அவரது போன் சுவிட்ச் ஆஃப் ஆனது. இதனிடையே, அந்த பெண்ணிடம் உதவி செய்வது போல் நடித்து அவரை காட்டுப் பகுதிக்கு இழுத்துச்சென்று 4 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, அந்த பெண்ணை எரித்துக்கொலையும் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் 4 பேரும் உடனடியாக கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து, தெலுங்கானா அரசு இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்க வலியுறுத்தியது.

இதுதொடர்பாக ஆந்திர பிரதேச முன்னாள் காவல்துறை ஆணையர் ஸ்வரான்ஜித் சென் கூறும்போது, பொதுமக்களின் கொந்தளிப்பே போலீசாரை இதுபோன்ற முடிவு எடுக்க வைத்துள்ளது. இது முற்றிலும் சரியானது இல்லையென்றாலும், இது தான் எதிர்பார்க்கப்பட்டது என்று நான் நினைக்கிறேன். இதுபோன்ற ஏதாவது நடக்கப்போகிறது என்று எனக்கு தெரியும் என்று அவர் கூறியுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here