தனுசு ராசி நேயர்களே விமர்சனம்

0
125
நடிகர்கள்:
ஹரிஷ் கல்யாண்,ரெபா மோனிகா ஜான்,திகங்கனா,முனிஸ்காந்த்
இயக்கம் :சஞ்சய் பாரதி

ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை உள்ளவர் அர்ஜுன்(ஹரிஷ் கல்யாண்). வீட்டை விட்டு வெளியே வரக் கூட நல்ல நேரம் பார்க்கும் இளைஞர். அவரின் ஜோதிட குரு பாண்டியராஜன். கன்னி ராசி பெண் அதுவும் வேறு மாநிலத்தை சேர்ந்தவரை திருமணம் செய்தால் உன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று பாண்டியராஜன் அர்ஜுனிடம் கூறுகிறார்.

குரு சொல்லியதை தெய்வ வாக்காக எடுத்துக் கொண்ட அர்ஜுன் கன்னி ராசி பெண்ணை தேடி அலைகிறார். அப்பொழுது அவர் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. கன்னி ராசி பெண் கிடைக்காமல் அல்லாடுகிறார் அர்ஜுன். அவர் வாழ்வில் பெண்கள் வந்தாலும் கன்னி ராசிக்காரி தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்.

ரெபா மோனிகா ஜான் அர்ஜுனின் முன்னாள் காதலியாக வந்துள்ளார். அவர் கதாபாத்திரமான அனிதா பெயருக்கு உள்ளது. அர்ஜுனுடன் வேலை செய்யும் பெண்ணுக்கு அவர் மீது காதல். ஆனால் அர்ஜுனுக்கு ராசி தான் முக்கியமாகத் தெரிகிறது. அவரின் அம்மா(ரேணுகா), மாமா (முனிஸ்காந்த்) ஆகியோர் எவ்வளவோ சொல்லியும் கன்னி ராசிப் பெண் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறார் அர்ஜுன்.

இந்நிலையில் தான் அவர் அனிதாவின் திருமணத்தில் கே.ஆர். விஜயாவை(திகங்கனா) பார்க்கிறார். வின்வெளி ஆய்வு விஞ்ஞானியான விஜயாவுக்கும், அர்ஜுனுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. ஆனால் இந்த இரு துருவங்களும் சேருமா என்பதே கதை.

ரொமான்டிக் காமெடி என்கிறார்கள். ஆனால் படத்தை பார்த்தபோது சிரிப்பே வரவில்லை. அட, முனிஸ்காந்த் வந்தபோது கூட சிரிப்பு வரவில்லை. யோகிபாபு சொல்ல, சொல்ல கதை செல்கிறது. ஆனால் யோகி பாபுவால் கூட தியேட்டருக்கு வந்தவர்களை சிரிக்க வைக்க முடியவில்லை. அரைத்த மாவையே அரைத்திருக்கிறார் புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி.

முதல் பாதியை பார்த்து முடிப்பதற்குள் பாதி பொருமை போய்விடுகிறது. இரண்டாம் பாதியில் அதை ஒரு வழியாக சரிகட்டியுள்ளார் இயக்குநர். யோகி பாபுவை வைத்து கதை சொல்லியது தேவையில்லாத விஷயம். காதல் படத்தில் பாடல்கள் கூட மனதில் நிற்கவில்லை. ஜிப்ரான் இசை கை கொடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ஹீரோ, ஹீரோயின் இடையே காதலை விட காமம் தான் தூக்கலாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here