கூடங்குளம் அணு மின் நிலையம் மீது சைபர் தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை.அதிகரி விளக்கம்

0
258

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா- ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. மேலும் 3, 4-வது அணு உலைகளின் கட்டுமான பணிகளும் அடுத்தடுத்து நடந்து வருகிறது. இது தவிர கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திலேயே 5, 6 என கூடுதலாக 2 அணு உலைகளும் அமைக்கப்பட உள்ளன.

மேலும் கூடங்குளத்தில் அணு கழிவு சேமிப்பு வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளும் நடந்து வந்தன. இதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் திடீரென கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் கூடங்குளம் அணு மின்நிலையம் வளாகம் முழுவதும் பாதுகாப்பு நிறைந்த பகுதியாக உள்ளது. இங்கு 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான தகவல்கள் இணைய வழியாக ஹேக்கர்களால் திருடப்பட்டு விட்டதாகவும், இதனாலேயே இரு அணு உலைகளும் அடிக்கடி பழுதடைவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பரவின. இதற்கு கூடங்குளம் அணுமின் நிலையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கூடங்குளம் அணுமின் நிலைய பயிற்சி கண்காணிப்பாளர் மற்றும் தகவல் அதிகாரி ராம்தாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலையம் மீதான இணைய தாக்குதல் குறித்து சமூக வலைத்தளங்களில் சில தவறான தகவல் பரவி வருகிறது. கூடங்குளம் அணுமின் திட்டம் மற்றும் இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களின் கட்டுப்பாடுகள் அனைத்தும் மற்றவைகள் போன்று வெளிப்புற இணைய தளத்தில் இணைக்கப்படாமல் தனித்துவம் வாய்ந்தது ஆகும்.

எனவே அணுமின் நிலைய கட்டுப்பாட்டு அமைப்பில் எந்தவித சைபர் தாக்குதலும் சாத்தியம் இல்லை. அணுமின் திட்டங்கள் குறித்த தகவல்களை ஹேக்கர்கள் திருடி விட முடியாது. அதற்கான வாய்ப்புகள் கிடையாது. கூடங்குளம் அணுமின் நிலைய தகவல்களை ஹேக்கர்கள் திருடி விட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலில் உண்மை இல்லை. தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2 அணு உலைகளும் இயங்கி வருகின்றன.

முதல் அணுஉலையின் மூலம் 1,000 மெகாவாட் மின்உற்பத்தியும், 2-வது அணுஉலையின் மூலம் 600 மெகாவாட் மின்உற்பத்தியும் நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here