அரசு மருத்துவர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர்

0
113

 

வேலைநிறுத்தம்

அரசு மருத்துவர்கள் நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும், தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தின் 8ஆம் நாளான இன்று மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

அமைச்சர் எச்சரிக்கை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மருத்துவர்களை உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என அழைப்பு விடுத்தனர். இன்று (நவம்பர் 1) காலை 10 மணிக்குள் போராட்டத்துல் ஈடுபட்ட மருத்துவர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், அந்த இடங்களை காலி இடங்களாக அறிவித்து புதிய மருத்துவர்களை நியமிப்போம் என்றும் எச்சரிக்கைவிடுத்தனர்.

பருவ மழை காரணமாக காய்ச்சல் காரணமாக மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளபோது மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் என கோரப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டாலும் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை மருத்துவர்கள் கவனித்துவந்தனர்.

இந்நிலையில் இன்று காலை முதலே சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் போலீஸார் அதிகரிக்கப்பட்டனர்.

போராட்டம் வாபஸ்

போராட்டத்தை ஒருங்கிணைக்கும் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லக்‌ஷ்மி நரசிம்மன் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தார். “முதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். பருவமழை, புயல் காரணமாக மக்கள் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுக்கிறோம்.

போராட்டத்தை நாங்கள் தொடர்ந்த போது அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என எதிர்பார்த்தோம். வாபஸ் பெற்றவுடன் பேச்சுவர்த்தைக்கு அழைப்பதாக கூறியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், பணியிட மாற்ற ஆணை ஆகியவற்றை அரசு திரும்பப் பெறவேண்டும். இன்று முதல் மருத்துவர்கள் பணிக்கு திரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here