தயாரானது எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க ஐஎன்எஸ் கந்தேரி நீர் மூழ்கிக் கப்பல்!!!

0
140

“முன்பு விட தற்போது இந்திய கடற்படை அதிக பலத்துடன் இருப்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும்” என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மும்பையில் தெரிவித்துள்ளார்.

மும்பையில் ஸ்கார்பியன் ரக ஐஎன்எஸ் கந்தேரி நீர் மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அர்ப்பணித்தார். இந்தக் கப்பல் நிலத்திலும், நீரிலும் இருந்தவாறு ஏவுகணைகளைத் தாங்கி எதிரிகளின் இலக்கை அழிக்கும் திறன் படைத்தது.

இந்தக் கப்பல் இந்தியக் கடற்படையில் இன்றே இணைகிறது. இதற்கான விழாவில் ராஜ்நாத் சிங் பேசுகையில், ”தேவைப்பட்டால், ஐஎன்எஸ் கந்தேரி நீர் மூழ்கிக் கப்பல் எதிரிகளின் இலக்கை அழிக்க பயன்படுத்தப்படும். இந்திய எல்லையில் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் மேலும் ஒரு தாக்குதல் நடத்த இருப்பதாக ஊகங்கள் எழுந்துள்ளன. அதுபோன்ற திட்டங்கள் இனிமேல் வெற்றி பெறாது. இன்று இந்தியப் பெருங்கடலில் இந்தியாவிடம் இருப்பது போன்ற ஆயுதங்களை எந்த நாடுகளும் வைத்திருக்கவில்லை. மும்பை மீது நடத்தப்பட்டது போன்று மேலும் ஒரு தாக்குதலில் ஈடுபட எதிரிகள் நினைத்தால், அவர்கள் அழிந்து போவார்கள்.

இந்திய கடற்படையை வலுப்படுத்துவதற்கான எந்த வாய்ப்பையும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். இன்று இந்திய கடற்படைக்கு இருக்கும் புதுமையான ஆயுதங்கள் அமைதியை விரும்பும் எந்த ஒரு நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது.

ஜம்மு காஷ்மீரில் நமது ஆக்கபூர்வமான செயல்பாடுகளை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன. ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடு நாடாக சென்று விமர்சித்து, கார்ட்டூனுக்கான செய்தியாகி வருகிறார்” என்றார்.

மும்பையில் உள்ள மத்திய அரசின் மசாகன் கப்பல் கட்டும் தளத்தில் இந்த நீர் மூழ்கிக் கப்பல் கட்டப்பட்டது. மணிக்கு 20 கி. மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. 67.5 மீட்டர் நீளம் கொண்டது. எதிரிகளை தாக்கும் வல்லமை கொண்ட நீர் மூழ்கிக் கப்பல்களின் உலகத் தரமே மணிக்கு 20 கி. மீட்டர்தான். அந்த திறனை ஐஎன்எஸ் கந்தேரி நீர் மூழ்கிக் கப்பல் கொண்டிருப்பது இதன் சிறப்பாகும்.

முன்பு இது மாதிரியான நீர் மூழ்கிக் கப்பலுக்கு 60 கப்பலோட்டிகள் தேவைப்பட்டனர். ஆனால், தற்போது 36 கப்பலோட்டிகள் போதுமானது. நீண்ட நேரம் நீருக்குள் மூழ்கி இருப்பதற்கு போதிய ஆக்சிஜனை இந்தக் கப்பல் கொண்டுள்ளது.

கடலுக்குள் தொடர்ந்து 45 நாட்கள் இருக்கும் திறன் கொண்டது என்றாலும், ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கும், காற்று சுத்திகரிப்புக்காக கடலின் மேற்பரப்புக்கு வர வேண்டியது அவசியாமாகிறது. மேலும், கப்பலுக்குள் இருக்கம் கார்பன் டை ஆக்சைடையும் சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பேட்டரிகளை சார்ஜ் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக, கடலின் மேற்பரப்புக்கு இந்தக் கப்பல் வர வேண்டியுள்ளது.

கடந்தாண்டில் கரஞ்ச், வேலா ஆகிய நீர் மூழ்கிக் கப்பல்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டில் ஐஎன்எஸ் கந்தேரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்னும் பல கப்பல்கள் இந்திய கடற்படையில் வரும் ஆண்டுகளில் இணைக்கப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here