உலகின் முன்னணி கார் நிறுவனமான டெஸ்லா கார் நிறுவனத்தை பார்வையிட்டார் முதல்வர் பழனிசாமி!!

0
87

மூன்று நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு இருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்காவில் உள்ள டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்று பார்வையிட்டார்.

தமிழக முதல்வர் பழனிசாமி பிரிட்டன் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ளார். கலிபோர்னியாவில் உள்ள மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கும் டெஸ்லா கார் நிறுவனத்தை பார்வையிட்டார்.

இவருடன் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், ஆர்.பி உதயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் சென்று இருந்தனர். தமிழகம் மாசு ஏற்படுத்தாத மின்சார கார் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருவதாக டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு தமிழக தலைமை செயலாளர் சண்முகம் விளக்கிக் கூறினார்.

இதையடுத்து கலிபோர்னியாவில் உள்ள மின் உற்பத்தி செய்யும் புளூம் எனர்ஜி நிறுவனத்தை முதல்வர் பழனிசாமி பார்வையிட்டார். இங்கு பயோ காஸ் மற்றும் ஹைட்ரஜனை எரிக்காமல், இயற்கை முறையில் மின்சாரம் தயாரித்து வருகின்றனர். தயாரிப்பு குறித்து அந்த நிறுவன அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நியூயார்க்கில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, தமிழத்துக்கு ரூ. 5,000 கோடி அளவிற்கு முதலீடு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக அமெரிக்காவின் சான் ஹீசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் 19 நிறுவனங்கள் சுமார் ரூ.2300 கோடி அளவில் தமிழகத்தில் முதலீடு செய்து தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

கடந்த செவ்வாய் கிழமை நியூயார்க்கில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அதில், 200க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டனர். ரூ. 2,780 கோடி மதிப்பீட்டில், 16 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம் தமிழகத்தில் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஜீன் மார்டின், சிடஸ் பார்மா, நோவிடியம் லேப்ஸ், அஸ்பையர் கன்சல்டிங், ஜில்லியன் டெக்னாலஜி ஆகிய தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க ஒப்பந்தம் செய்துள்ளன.

தமிழகத்தில் பெட்ரோகெமிக்கல் துறையில் ரூ. 50,000 கோடி முதலீடு செய்ய ஹால்டியா பெட்ரோகெமிக்கல்ஸ் முன் வந்துள்ளது. முதல்வரே இந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து அமெரிக்காவில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் பழனிசாமி துபாய் செல்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here