விற்பனை வீழ்ச்சி…மாருதி சுஸுகி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம்..!

0
71

இந்தியாவின் முதன்மையான வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, தன்னுடைய ஆலைகளில் உற்பத்தி பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உலக மக்கள்தொகை எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய நாடாக இருப்பது இந்தியா. இதன் காரணமாகவே, உலக வாகனச் சந்தையில் முதன்மை பெற்ற நாடாக இந்தியா திகழ்கிறது.

ஆனால் இந்த நிலை மேலும் தொடருமா என்பது தான் பெரிய சந்தேகம். அண்மைக் காலமாக ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள விற்பனை வீழ்ச்சி, நாட்டின் பொருளாதார நிலைக்கே அச்சுற்றுத்தலை விடுத்துள்ளது.

பெரும்பாலான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மோசமான சரிவை சந்தித்துள்ளன. மேலும், சந்தித்து வருகின்றன. ஆட்டோமொபைல் துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கானோர் பலர் வேலை இழந்துள்ளனர்.

ஆட்டோமொபைல் துறையை நம்பி வாழும் குறு மற்றும் சிறு நிறுவனங்கள், டீலர்ஷிப்புகள், ஷோரூம்களும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அங்கும் வேலை இழப்பு ஏற்பட்டு வருவது வேதனைக்குரியது.

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுஸுகியும் இந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை. இந்தாண்டு தொடங்கியதில் இருந்தே விற்பனை வீழ்ச்சியை மாருதி சுஸூகி சந்தித்து வருகிறது.

இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, தற்காலிக ஊழியர்கள் பலரை வேலையில் இருந்து எடுத்துவிட்டது மாருதி. மேலும், நாட்டிலுள்ள மாருதி சுஸுகியின் ஆலைகளில் அவ்வப்போது வேலையில்லா நாட்களும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே, ஒவ்வொரு மாதமும் குறைந்த விற்பனை திறனை பதிவு செய்து வருகிறது மாருதி சுஸுகி. கடந்த மாதமும் அந்நிறுவனத்திற்கு பெரியளவில் விற்பனை அளவு கிடைக்கவில்லை.

கடந்த ஆகஸ்டில் மட்டும் 33 சதவீத விற்பனை வீழ்ச்சியை மாருதி சுஸுகி சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனங்களில் இருப்பு தேங்குவதை தவிர்க்க, பல்வேறு ஆலைகளில் 2 நாட்களுக்கு மட்டும் உற்பத்தியை மாருதி சுஸுகி நிறுத்தி வைத்துள்ளது.

அதன்படி, டெல்லி அருகே உள்ள மானேசர் மற்றும் குர்கான் பகுதிகளில் செயல்பட்டு வரும் மாருதி சுஸுகியின் ஆலைகளில் வரும் 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் உற்பத்தி நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை கால விற்பனை தொடங்கவுள்ள நிலையில், மாருதி சுஸுகியில் இந்த நடவடிக்கையால், அங்கு பணியாற்றும் தற்காலிக மற்றும் நிரந்தர தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், பண்டிகை கால விற்பனையை எதிர்கொள்ள மாருதி சுஸுகி தயாராக இருப்பதாக்வே, அந்நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் அதிகார்கள் மற்றும் டீலர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வரை மாருதி சுஸுகியின் விற்பனை எழுச்சி அடையவில்லை. அந்நிறுவனத்தின் பங்குகளில் பெரியளவில் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. எனினும், பண்டிகை கால விற்பனையை பொருத்தே மாருதி தன்னுடைய அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here