அமெரிக்காவில் பழனிசாமியின் புதிய தொழில் ஒப்பந்தம்!!

0
94

நியூயார்க்கில் ரூ. 2,780 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு இருந்த முதல்வர் பழனிசாமி இன்று அமெரிக்காவின் சான் ஹீசே நகரில் சுமார் ரூ.2300 கோடி அளவிற்கு மேலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார்.

அமெரிக்காவின் சான் ஹீசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் 19 நிறுவனங்கள் சுமார் ரூ.2300 கோடி அளவில் தமிழகத்தில் முதலீடு செய்து தொழில் துவங்க மேலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த செய்தி முதல்வருக்கான அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை நியூயார்க்கில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அதில், 200க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டனர். ரூ. 2,780 கோடி மதிப்பீட்டில், 16 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம் தமிழகத்தில் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஜீன் மார்டின், சிடஸ் பார்மா, நோவிடியம் லேப்ஸ், அஸ்பையர் கன்சல்டிங், ஜில்லியன் டெக்னாலஜி ஆகிய தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க ஒப்பந்தம் செய்துள்ளன.

தமிழகத்தில் பெட்ரோகெமிக்கல் துறையில் ரூ. 50,000 கோடி முதலீடு செய்ய ஹால்டியா பெட்ரோகெமிக்கல்ஸ் முன் வந்துள்ளது. முதல்வரே இந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் முதலீடு செய்து இருக்கும் கேட்டர்பில்லர் மற்றும் போர்டு மோட்டார்ஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் முதல்வரை சந்தித்துப் பேசியுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் “யாதும் ஊரே” திட்டத்தை அமெரிக்க வாழ் தமிழர்கள், தொழில் அமைப்புகள் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பிரிட்டனிலும் சுகாதார துறையில் மூன்று திட்டங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட முதல்வர், அமெரிக்காவிலும் பல்வேறு திட்டங்களை ஈர்த்துள்ளார். அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு, முதல்வர் துபாய் செல்கிறார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here