சினிமா டிக்கெட்கள் இனி ஆன்லைனில் மட்டுமே விற்கப்படுமா??

0
42

சினிமா டிக்கெட்கள் முழுமையாக இனி ஆன்லைனில் மட்டுமே விற்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கடம்பூர் ராஜு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் நேற்று கோவில்பட்டியில் பத்திரிகையாளர்களின் சந்திப்பின் போது “திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருள்களின் தரத்தைத் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதேபோல, அந்த பொருள்களின் விலையை கட்டுப்படுத்தவும் பல விதிமுறைகளை வகுத்துள்ளார்கள். திரையரங்கு கட்டணங்களை ஒழுங்குபடுத்தியுள்ளோம். திரையரங்கில் பார்க்கிங் கட்டணமும் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் வாயிலாக புக்கிங் செய்யப்படும் டிக்கெட்டுகள் வெளிப்படையாக தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு எத்தனை காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது.

அதே போல, ஒரு காட்சிக்கு எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறன என்பதைக் குறிப்பிட்ட சில திரையரங்குகளை சோதனை முயற்சியாகக் கண்காணித்து வருகிறோம்” என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், “படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் இந்த செய்முறையை விரிவுபடுத்தப்பட்டு விரைவில் ஆன்லைன் டிக்கெட் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்போகிறோம்.

இவ்வாறு அமலுக்கு வந்தால், இனி தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும். அதற்கான, கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும்” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார் .

தற்போது இவரின் இந்த அறிவிப்புக்கு திரை உலகத்தினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னணி தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்க முன்னாள் பொருளாளருமான எஸ்.ஆர்.பிரபு பேசும் பொழுது, “இது 200 சதவீதம் சாத்தியமானது மற்றும் இது வரவேற்கத் தக்க விஷயம். திரையரங்கத்தில் டிக்கெட் எடுக்க வருபவர்களுக்கும் ஆன்லைனிலேயே டிக்கெட் புக் செய்து கொடுக்கலாம்.

ஆன்லைன் புக்கிங்குக்கான சேவை கட்டணம் தான் இங்கு முக்கிய பிரச்சினையாக உள்ளது. வெளி நாடுகளில் இந்த கட்டணம் 2 முதல் 4 சதவீதம் மட்டும்தான் உள்ளது. அதாவது 100 ரூபாய்க்கு 2 ரூபாய் தான் வரி வசூலிக்கப் படுகிறது. ஆனால் நம் நாட்டில், ஒரு டிக்கெட்டுக்கு 30 முதல் 40 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இதை இந்திய அரசாங்கம் சரிசெய்ய வேண்டும்.

இதற்கு திரையரங்கு உரிமையாளர்களும் சம்மதிக்க வேண்டும். ஒரு திரையரங்கில் ஆன்லைன் மூலம் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்றால் 3 கோடி ரூபாய் கட்டணமாக வருகிறது. இந்த கட்டணத்தை தவிர்க்க நேரில் வந்து எடுக்கும் ரசிகர்களது நிலையையும் யோசித்து செயல்பட வேண்டும். ஆனால் முழுக்க ஆன்லைன் டிக்கெட் என்பதன் மூலம் வரி ஏய்ப்பு தவிர்க்கப்படும். அரசுக்கு சேர வேண்டிய வரி முழுமையாக கிடைக்கும்” என்று அவர் கூறினார்.

இது குறித்து எஸ்.ஆர்.பிரபு மேலும் பேசும் பொழுது, “கதாநாயகர்களின் சம்பளத்தை முறைப்படுத்த முடியும். வங்கிகள் பட தயாரிப்புக்கு கடன் கொடுக்க முன்வருவார்கள். தனியாருக்கு வட்டி கட்டும் சுமை குறையும். அரசுக்கு வரி வருமானம் அதிகரிக்கும் என்பதால் இதுவரை இருந்து வரும் 20 சதவீத வரியை குறைக்க வேண்டும்.

அதே நேரத்தில் இந்த ஆன்லைன் டிக்கெட் முறை மூலம் பிளாக் டிக்கெட் வருவதற்கும் அதிகப்படியான வாய்ப்புகள் உண்டு. அதையும் நம் அரசாங்கம் முறைப்படுத்த வேண்டும். இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை களைந்து அரசு சரியான முறையில் இதை செயல்படுத்தினால் சினிமா மீண்டும் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறும்” என்று கூறினார்.

மேலும் தயாரிப்பாளர் சங்கமும் இந்த முறையை வரவேற்றுள்ளது. எஸ்.ஆர்.பிரபுவைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் இது குறித்து பேசும் பொழுது, “தியேட்டர் வசூலில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காக இது நீண்ட நாட்களாக நாங்கள் அரசிடம் வைத்த கோரிக்கை. கதாநாயகர்களின் சம்பளம் தான் பட தயாரிப்பு தொகையில் பெரும் அளவை விழுங்குகிறது.

அவர்களிடம் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டுகோள் வைத்தால் நீங்கள் ஒழுங்காக கணக்கு காட்டுங்கள் என்று சொல்கிறார்கள். அதே நேரத்தில் தோல்வி அடைந்த படங்களுக்கும் வெற்றி விழா கொண்டாடுதல், 100 கோடி, 150 கோடி வசூல் என்று பொய் கணக்கு காட்டுவதும் தமிழ் சினிமாவில் நடந்து வருகின்றது. ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் என்ற நிலை வந்தால் கதாநாயகர்களின் உண்மையான மார்க்கெட் நிலவரம் தெரிந்து விடும்.

எனவே சினிமாவுக்கு இது ஆரோக்கியமான விஷயம் தான். இது சாத்தியமான ஒன்றும் கூட. கோவை திரையரங்குகளில் 80 சதவீதத்துக்கு மேல் ஆன்லைனாகி விட்டன. அவர்களால் முடிந்தது ஏன் மற்றவர்களால் முடியாது. கடம்பூர் ராஜூவின் இந்த அறிவிப்பிற்காக நாங்கள் எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிரோம்” என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியுள்ளார்.

ஆனால் இவர்களது முடிவு தமிழக ரசிகர்களை எந்த அளவிற்கு திருப்திபடுத்தும் என்று தெரியவில்லை. கட்டணங்கள் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே சென்றால், திரையரங்கத்திற்கு வரும் ரசிகர்கள் குறைந்து விடுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here