பக்ரீத் மினி விமர்சனம்

0
71
நடிகர்கள்
விக்ராந்த்,வசுந்தரா,தினேஷ் பிரபாகர்
இயக்கம்
ஜெகதீசன் சுப்பு
கரு: அன்பு என்பது மனிதர்கள், மனிதர்களிடத்து மட்டும் காட்டுவது அல்ல, அதற்கு உலகமே கூட இலக்கல்ல, அன்பு எங்கும் நிறைந்தது. எல்லா உயிர்களுக்குமானது என்பதே படத்தின் கரு.

கதை: விக்ராந்த் பல கஷ்டங்களுக்கு பிறகு தனக்கு கிடைத்த நிலத்தில், கடன் வாங்கி விவசாயம் செய்ய முயல்கிறார். குர்பானிக்காக வரும் ஒரு ஒட்டகக்குட்டி ஒன்று அவரிடம் வந்து சேர, வீட்டு மாட்டைப் போல் அதனை தன் வீட்டில் வளர்க்கிறார்.

ஒரு அழகான குழந்தை, அன்பான மனைவி, விவசாயம், ஒட்டகம், மாடு, என வாழ்க்கை நீரோடையின் அன்பாக பயணமாகிறது. திடீரென ஒட்டகத்திற்கு சுகமற்று போக, டாக்டர் அதனை அதன் இருப்பிடத்தில் வளர்த்தால் தான் நல்லது என்கிறார்.

இல்லையென்றால் அதன் வாழும் காலம் குறையும் என்கிறார். அன்பால் அதன் உயிர் காக்க ஒட்டகத்தை ராஜஸ்தானில் விட்டுவிட்டு வர, விக்ராந்த் கையில் பணமேதுமில்லாமல் பயணமாகிறார்.

அவரை ஏமாற்ற நினைக்கும் லாரி டிரைவர், இடையில் அவர் சந்திக்கும் பிரச்சனைகள், அப்பா ஒட்டகத்தை கூட்டி வருவார் என காத்திருக்கும் குழந்தை, இவையெல்லாவற்றையும் தாண்டி ஒட்டகம் ராஜஸ்தானை அடைந்ததா? விக்ராந்த் பயணத்தின் முடிவென்ன? என்பது தான் கதை.

விமர்சனம்: அன்பிற்கும் உண்டோஅடைக்கும் தாழ் என்பது தான் படத்தின் ஆத்மா. ஒரு அழகான எளிமையான கதை காக்கா முட்டை சாயலில் நடைபோடும் திரைக்கதை. தமிழில் குறிப்பிடும் படியான படைப்பாக மிளிர்கிறது பக்ரீத்.

ஒரு படம் வாழ்க்கையின் சாத்தியங்களை மீறாமல் எளிமையான வாழ்க்கையை அடுக்கடுக்கான சம்பவங்களில் சொல்லும்போது மனதிற்கு அது மிக நெருக்கமாகி விடுகிறது. படம் கிராமத்தில் நடக்கிறது. அது இதுவரை காட்டிய கிராமமாக இல்லாமல் நமக்கு அச்சு அசலான தற்கால கிராமமும், மனிதர்களும் காட்டப்படுவது அழகு.

டவுசருடன் மாடோட்டும் விக்ராந்த், கைலி, தாடியுடன் மாட்டுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர், டிவிஎஸ் ஃபிப்டியில் அப்பளம் விற்கும் தொழிலாளி அனைவரும் படத்தை ஆரம்பத்திலேயே மனதுக்கு நெருக்கமாக்கி விடுகிறார்கள்.

ஒட்டகத்தை ராஜஸ்தான் கொண்டு செல்வது தான் கதை. ஆனால் அதன் வழியே பொங்கும் அன்பின் பயணம் தான் படம். அது அழகாகவும் மனதில் பதிகிறது. சொத்துக்காக சண்டை போட்ட அண்ணன் வாடிய பயிர் கண்டு தாங்க முடியாமல் வாய்க்காலுக்கு நீர் பாய்ச்சுகிறார். ஏமாற்ற நினைக்கும் லாரிக்காரர் ஒட்டகத்திற்காக அழுகிறார்.

கையில் பணமில்லாமல் நடந்தே செல்லும்போது எதிர்வரும் அமெரிக்கர் ‘உலகத்தையே கையில் பணமின்றி சுற்றுகிறேன் உனக்கென்ன உன் நாடு இது‘ என்று சொல்வது, மாட்டுக்கு சாப்பாடு போடும் குழந்தை என படம் முழுதும் அன்பு நிறைந்து கிடக்கிறது. அந்த அன்பு தான் படத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றுகிறது.

வசுந்தரா அப்படியே அச்சு அசலான கிராமத்து பெண்ணை மீண்டும் இப்படத்தில் உயிர்பித்திருகிறார். நண்பனாக வரும் தினேஷ் மலையாள வாடை பேச்சில் வீசினாலும், அதிர வைக்கும் நடிப்பைத் தந்துள்ளார். லாரி டிரைவரும் கிளீனரும் மனதை அள்ளுகிறார்கள்.

விக்ராந்த், தன் திறமை முழுதையும் கொட்டியிருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் அழுவது, ஒட்டகத்தை கொஞ்சுவது, அப்பாவியாய் பரிதவிப்பது அத்தனையும் மீறி பயணிப்பதென மனிதருக்கு இப்படம் ஒரு மகுடம். ஒட்டகம் இப்படத்தில் ஒரு பாத்திரம். படம் முழுதும் ஒரு உயிராய் நிறைந்துள்ளது.

இயக்குநர் ஜெகதீஷன் சுப்பு ஒரு அட்டகாசமான திரைக்கதையுடன் வந்திருக்கிறார். ஒட்டகத்தின் பயணத்தில் இந்திய மூலைகள் பலவற்றையும், மத பேதங்களையும் ஏமாற்றும் மனிதர்களையும், எல்லாவற்றையும் மீறி பொங்கும் அன்பையும் ஒட்டகத்த்தின் வழி மனதில் மீட்டெடுத்திருக்கிறார்.

இசை பல இடங்களில் அபாரம். சில இடங்களில் தேவையற்ற சோகம். ஒளிப்பதிவில் இந்திய நிலப்பரப்பின் மொத்தத்தையும் கேமராவில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். பக்ரீத் வெகு காலத்திற்கு பிறகு தமிழில் ஓர் அன்பான சினிமா.

பலம்: எளிமையான திரைக்கதை, நடிகர்களின் அபாரமான நடிப்பு, உருவாக்கம்.

பலவீனம்: கொஞ்சம் அலைபாயும் முன்பாதி.

இறுதியாக, அன்பிற்கு இல்லை எல்லை! அதை அழுத்தி சொல்லும் படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here