வேலையை இழந்து குடியிருக்கக் கூட இடமில்லாததால் ஐ.டி ஊழியர் 26வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

0
66
சென்னை சோழிங்கநல்லூரில் வேலையை இழந்த ஐ.டி. ஊழியர், குடியிருக்கக் கூட இடம் இல்லாமல் போன விரக்தியில் 26வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஈஸ்வர ராவ், சென்னையில் உள்ள தனியார் ஐ.டி.கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்றிரவு சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 26வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த காவலர்கள், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செம்மஞ்சேரி போலீசார், தற்கொலை செய்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பெற்றோரை இழந்த ஈஸ்வர், சென்னையில் உள்ள தனியார் ஐ.டி.கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர் சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கியிருந்தார். வாங்கிய சம்பளத்தை எல்லாம், நண்பர்களுடன் மது அருந்துவது, ஜாலியாக ஊர் சுற்றுவது என செலவழித்துள்ளார். இந்நிலையில், குடிபோதைக்கு அடிமையான ஈஸ்வர், கடந்த சில நாட்களாக பணிக்கு சரிவர செல்வதில்லை. இதனால் அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

தொடர் துயரங்களால் மனவேதனையில் இருந்த ஈஸ்வர், நேற்று சோழிங்கநல்லூரில் நண்பர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றார். ஆனால் அங்கு நண்பர்கள் யாரும் இல்லை. பின்னர் வெளியில் நின்ற ஆட்டோவில் ஏறி நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது அத்தை வீட்டுக்கு இரவு தங்கச் சென்றார். ஆனால் அவரது அத்தை ஈஸ்வரை வீட்டில் தங்குவதற்கு அனுமதிக்கவில்லை.

இதனால் மனவேதனை அடைந்த ஈஸ்வர் மீண்டும், அதே ஆட்டோவில் சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றார். ஆட்டோ ஓட்டுநரை 10 நிமிடம் காத்திருக்கும்படி குடியிருப்புக்குள் சென்ற ஈஸ்வர் மீண்டும் திரும்ப வரவில்லை.

பின்னர் சிறிது நேரத்திலேயே அவர் 26வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. பெற்றோரை இழந்து, வேலையையும் இழந்து, உறவினர்களும் கைவிட்டதால், குடியிருக்கக் கூட இடம் இல்லாமல் போன விரக்தியில் ஈஸ்வர் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here