கரு – ஒரு பெண் மாடர்னாக, குடும்ப பெண்ணாக, தோழியாக, காதலியாக, மனைவியாக என யாராக இருந்தாலும் அவள் ’நோ’ சொன்னால் அதன் அர்த்தம் ’நோ’ தான். இது தான் படத்தின் கரு.
கதை – மூன்று மாடர்ன் பெண்கள், தனியே நகரில் தங்கி வேலை பார்க்கும் நவீன பெண்கள், ஒரு சூழ்நிலையில் பெரிய இடத்து ஆண்களுடன் டின்னருக்கு சென்று பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள். அந்தப் பிரச்சனை பெரிதாக அவர்கள் மீதே குற்றம் திரும்புகிறது. பாலியில் ரீதியில் பாதிக்கப்பட்ட பெண்கள், கொலை முயற்சி குற்றத்தில் கைதாகி சமூகத்தால் அசிங்கமாக பார்க்கப்படுகிறார்கள். அவர்களுக்காக மனரீதியில் பாதிக்கப்பட்டு தனித்திருக்கும் பரத் எனும் வக்கீல் ஆஜராகி வாதாடுகிறார். அவர்களின் நியாயம் சமூகத்திற்கும், நீதிமன்றத்திற்கும் கேட்கிறதா? என்பதே கதை.
விமர்சனம் – இந்தியில் வந்த “பிங்க்” படத்தின் தமிழ் ரீமேக்தான் நேர்கொண்ட பார்வை. இந்தப் படத்தில் நடிகர் அஜித் நடிக்கிறார் என்ற செய்தியே முதலில் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் தந்தது. ஏனென்றால் “பிங்க்” படம் ஒரு மாஸ் படமல்ல. அது இன்றைய நவீன பெண்களின் உரிமையை பேசியுள்ள படம். அதில் அமிதாப் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். அஜித்துக்கு தமிழகத்தில் இருக்கும் பிம்பம் முற்றிலும் வேறானது. அது மாஸ் ஹீரோக்களுக்கானது. ரசிகர்கள் அஜித்தை பார்க்கும் விதம் வேறானது. ஆனால் அஜித்தின் கட்டாயத்தில் இப்படம் உருவாகியது. “பிங்க்” படத்தின் சாரம் கெடாமல் அஜித்தின் இமேஜும் முழுதாய் சரியாமல் படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் வினோத்.
நவீன சமூகம் எத்தனை வளர்ந்திருந்தாலும் பெண்களின் மீதான பார்வை, அடக்குமுறை என்பது கற்கால பாணியிலேயே இன்றும் நீடிக்கிறது. நாகரீகம் அதீதமாக வளர்ந்த இந்த நிலையிலும் ஒரு பெண் தனியே இரவில் நடப்பது பிரச்சனை தான். ஒரு பெண் எளிதில் அவள் உடைகள், பேச்சு, பழகும் விதத்தில் விபச்சாரி பட்டம் கட்டப்பட்டு விடுகிறாள். ஆணுக்கான நியாயங்கள் பெண்ணுக்கு சரியாக, சமமாக எப்போதும் கிடைப்பதில்லை. சமூகம் பெண்ணை பாதுகாப்பாக இருக்கச் சொல்கிறதே அன்றி , ஆண்களை ஒழுக்கமாக இருக்கச் சொல்வதில்லை. இந்த நிலைகள் எல்லாவற்றையும் படம் அழுத்தமாய் பேசியிருக்கிறது. படத்தின் கருவாக அதுவே இருப்பதால், முதல் காட்சியிலிருந்தே அதை நோக்கியே பயணிக்கிறது. இந்த விசயங்களை அழுத்தமாய் பேசியதற்கு படக்குழு மொத்தத்திற்கும் ஒரு பெரிய பூங்கொத்து தரலாம்.
இப்படத்தில் அஜித் ஒரு மிகப்பெரிய சாதனையை சர்வ சாதாரணமாக நிகழ்த்தியிருக்கிறார். அவருடைய பிம்பத்தை விட்டு முழுக்க வெளியே வந்து இப்படியான ஒரு படத்தில் நடித்திருப்பது பெரும் துணிச்சல். இதை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பது இரண்டாம் பட்சமே! செய்வது தான் பேரழகு. அந்த பேரழகை திரையில் அஜித் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். வக்கீல் வேடம் ஏற்று, மன நலப் பிரச்சனை கொண்டவராக, தன்னையே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத வேடத்தில், இதுவரை நாம் பார்த்திராத அஜித்தாக இதில் பரிணமித்திருக்கிறார்.
வக்கீலாக நடுங்கும் குரலில் அவர் வாதம் செய்யும் இடங்கள் கிளாப்ஸ். பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என சமூகம் வைத்திருக்கும் வரை முறையை சட்டமாக அவர் சொல்லும் இடங்கள் மொத்த சமூகத்திற்கான பாடம். அஜித் கேரியரில் இப்படம் தனி ரோஜாவாக தெரியும். தொடர்ச்சியாக பெண்களை ஆதரிக்கும் கருத்துக்களை தன் கமர்ஷியல் படங்கள் மூலமாகவும் பேசும் அவரின் அக்கறைக்கு வாழ்த்துக்கள். ஹீரோயினுடன் குத்தாட்டம் போடும் கமர்ஷியல் மசாலா படங்களை மட்டுமே பெரிய ஹீரோக்கள் செய்கிறார்கள் எனப் பேசும் வாய்க்கு இப்படம் மூலம் பெரிய பூட்டு போட்டிருக்கிறார். ஆனால் அவரின் தீவிர ரசிகர்கள் இப்படத்தை ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே!
ஸ்ரதா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா , அபிராமி இன்றைய நவீன பெண்களின் மனசாட்சியாக திரையில் பிரதிபலித்திருக்கிறார்கள். படம் முழுவதும் பரவும் அவர்களது அழுகையும், பயமும், குற்ற உணர்வும், எந்தத் தவறும் செய்யாத அவர்கள் மீது, சமூகம் வைக்கும் பார்வையை நம்முள் கடத்தியிருக்கிறது. மூவரின் நடிப்பும் அற்புதமாக திரையில் அரங்கேறியிருக்கிறது. ரங்கராஜ் பாண்டே முதல் முதலாக திரையில் அஜித்துக்கு நேராக நிற்கும் ஆளுமையை அடித்து ஆடியிருக்கிறார். இனி அவரை பல படங்களில் காணலாம்.இயக்குநர் வினோத், அஜித்துக்கு இப்படி ஒரு படம், அவரது ரசிகர்களும் ரசிக்க வேண்டும், அதே நேரம் ஒரிஜினல் படத்தின் சாரமும் கெட்டுவிடக்கூடாது என இரண்டையும் பேலன்ஸ் செய்திருக்கிறார். அஜித்திற்காக அவர் வைத்திருக்கும் இடைவேளைக்கு முன்பான காட்சிகள் அவரது தீவிர ரசிகனை கவரும். ஆனால் வித்யா பாலன் உடனான காதல் ஃபிளாஷ்பேக் அதிகம் ஒட்டவில்லை. இந்தியில் இப்படம் ஜெயித்ததன் காரணம் அது ஒரு எளிமையான படமாக இருந்தது தான்.
ஆனால் தமிழில் அஜித் செய்தது நல்ல விசயமே என்றாலும், அஜித்தின் பலம் படத்தை பலமிழக்கச் செய்கிறது. படம் முழுவதும் அஜித்தின் மீதான கவனமே அதிகமாக இருக்கிறது இது படத்தின் அடிப்படை கருத்தை அதிகம் பாதிக்கிறது. ஒரு கமர்ஷியல் படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் ஹீரோ செய்யும் விசயமே ஒரு முழுப்படமாக ஆகியிருப்பது போல் இருப்பது பலவீனம்.
படத்தின் பின்பாதி முழுக்க கோர்ட் டிராமா வசனங்கள் ஈர்த்தாலும், வாதங்கள் காட்சிகளை சுவாரஸ்யப்படுத்தவில்லை. அதனால் படத்தின் பின் பாதி நீளம் அதிகமாக தோன்றுகிறது. விவாதங்கள் முடிந்த பின்னும் நமக்கு தெளிவான பார்வை கிடைக்காமல் இருப்பது, நிகழ்வுகளை விளக்காமல் இருப்பது, படத்தை புரிந்து கொள்வதில் சிரமத்தை தருகிறது. அஜித்திற்கென உருவாக்கப்பட்ட காட்சிகள் பக்கா மசாலா படக் காட்சிகள். இந்தப் படத்திற்கு அது தேவையா எனும் கேள்வி எழுகிறது.
படத்தின் பெரும் பலம் இசை. படத்தின் பிரச்சனையுடன் நம்மை கட்டிப்போடும் வேலையை சரியாய் செய்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. நீரவ் ஷா ஒளிப்பதிவு அருமை. படத்தின் மேக்கிங் கவனம் ஈர்க்கிறது. நேர் கொண்ட பார்வை சமூகத்திற்கு தேவையான சினிமா.
பலம் – அஜித், படத்தில் பேசப்படும் விசயம், முன் பாதி.
பலவீனம் – அஜித்தின் ஆளுமை, படத்தின் இழுவையான பின்பாதி.
இறுதியாக – நவீன பெண்களின் பிரச்சனைகளை அழுத்திச் சொல்லும் அழகான சினிமா! ஆனால் அஜித் ரசிகர்களுக்கானது அல்ல!