அரிவாளுடன் வந்த கொள்ளையர்களை ஓட,ஓட விரட்டிய வயதான தம்பதிகள்!!

0
222
கொள்ளையர்களுடன் வீரத்துடன் சண்டையிட்டு, அவர்களை விரட்டி அடித்த வீரத் தம்பதிக்கு போலீஸ் எஸ்.பி பாராட்டு தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் கடையம் அடுத்த கல்யாணிபுரத்தில் சண்முகவேல், செந்தாமரை என்ற முதிய தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன்கள் வெளியூரில் வேலை பார்த்து வருவதால், இருவர் மட்டும் தங்கள் தோட்டத்து வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு, இவர்கள் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள், சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கியுள்ளனர். இவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி செந்தாமரை ஓடி வந்துள்ளார்.

அப்போது நிலைமையை உணர்ந்து கொண்டு, உடனே அருகில் இருந்த நாற்காலிகளை தூக்கி கொள்ளையர்கள் மீது வீசியுள்ளார். அதற்குள் மற்றொரு கொள்ளையனும் நுழைந்துள்ளான். அவர்கள் இருவரும் தங்கள் கைகளில் அரிவாள் வைத்திருந்தனர்.

ஆனால் அதைக் கண்டு அச்சமடையாமல், முதிய தம்பதி வீரத்துடன் சண்டையிட்டுள்ளனர். இருவரும் மாறி, மாறி நாற்காலிகள், காலணிகளை தூக்கி வீசியுள்ளனர். அருகில் சென்று கொள்ளையர்களின் அரிவாளை பிடுங்கி, அவர்களை வளைத்து பிடிக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை.

இருப்பினும் தொடர்ந்து தாக்குதல் நடத்திய முதிய தம்பதிகளிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் கொள்ளையர்கள் ஓட்டம் பிடித்தனர். இதில் செந்தாமரைக்கு காயங்கள் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார்.

இந்த கொள்ளை முயற்சி தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் வீரத்துடன் செயல்பட்ட தம்பதிகளை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்ட எஸ்.பி அருண் சக்திகுமார் நேரில் சென்று, முதிய தம்பதிகள் இருவரையும் பாராட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here