வரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு

0
62
சந்திரயான் 2 விண்கலம் வரும் 22ம் தேதி மாலை 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்திரயான்-2 விண்கலம், வரும் 22ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ நிறுவனம் சந்திரயான் 2 விண்கலம் தயாரித்துள்ளது. இது ஜி.எஸ்.எல்.வி மார்க் III ராக்கெட் மூலம் கடந்த 15ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான கவுண்ட் டவுனும் தொடங்கப்பட்டது.

சந்திரயான் 2 ஏவுதலை நேரில் பார்வையிடுவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கவர்னர் பன்வாரிலால் புரோகித், ஆந்திர கவர்னர் நரசிம்மன் ஆகியோர் ஸ்ரீஹரிகோட்டா வந்திருந்தனர். மேலும், பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் அரங்கிற்கு வந்திருந்தனர்.

சரியாக அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், நள்ளிரவு 1.55 மணிக்கு கவுண்ட் டவுன் நிறுத்தப்பட்டது. இதனால் ஸ்ரீஹரிஹோட்டாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கவுண்ட் டவுன் நிறுத்தப்பட்டதற்கான காரணம் தெரியாமல் அனைவரும் திக்குமுக்காடி போயினர்.

பின்னர், இஸ்ரோ தலைவர் சிவன் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்ட முடிந்த பின், சந்திரயான் 2 விண்கலம் ஏவுதலை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் ராக்கெட்டில் தொழில்நுட்ப இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கவுண்ட் டவுன் நிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது சந்திரயான் 2 விண்கலம் வரும் 22ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 22ம் தேதி, மாலை 2.43 மணிக்கு சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here