தி லயன் கிங் சினிமா விமர்சனம்

0
69
நடிகர்கள் அரவிந்த்சாமி,சித்தார்த்,மனோபாலா,ரோபோ சங்கர்,சிங்கம் புலி,ரோகிணி,ஐஸ்வர்யா ராஜேஷ்.

கரு – ராஜா சூழ்ச்சியில் இறந்து போக மகன் வளர்ந்து வந்து ராஜ்ஜியத்தை மீட்டெடுப்பது தான் கரு.

கதை : முபாஸா எனும் சிங்கம் காட்டை மிக நல்ல முறையில் ஆண்டு வருகிறது. அதன் வாரிசான சிம்பா, இளம் வயது கனவுகளுடன் இருக்கிறது, முபாஸா தம்பியான ஸ்கார் ராஜ்ஜியத்திற்கு ஆசைப்பட்டு முபாஸாவை திட்டமிட்டு கொலை செய்கிறது. மேலும் முபாஸா சாவுக்கு காரணம் சிம்பா தான் என நினைக்க வைக்கிறது. காட்டை விட்டு ஓடிவிடும் சிம்பா வளர்ந்து மீண்டு வந்து, ராஜ்ஜியத்தை மீட்டெடுப்பதுதான் கதை.

விமர்சனம் – பைபிளில் இருந்து தழுவப்பட்டு உருவாக்கப்பட்ட குழந்தைகள் கதை தான் தி லயன் கிங். பல்வேறு வடிவங்களில் உலகமெங்கும் மீளுரு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இப்போது டிஸ்னி தயாரிப்பில் ஆயிரம் கோடியில் அனிமேஷன் வடிவம் கண்டிருக்கிறது. உலகம் முழுக்க குழந்தைகள் அதிகமுறை கேட்ட கதை தான். அதை மீண்டும் இக்கால தொழில்நுட்பத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். உலகம் அந்தந்த மொழிகளில் வெளியிட்டிருக்கிறார்கள். இம்முறை அந்தந்த மொழிகளில், தன்மை மாறாமல் அவர்கள் வட்டார வழக்குடன் கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.

அதனால் தான் இத்தனை பிரபலங்கள் இங்கே குரல்தந்திருக்கிறார்கள். தி லயன் கிங் படம் ஆரம்பிக்கும்போதே நம்மை ஒரு உண்மையான காட்டுக்குள் அழைத்து சென்று விடுகிறது. முழுக்க நாம் விலங்களோடு ஒரு பயணம் போய் வந்தது போல் இருக்கிறது இந்தப்படம். மிக ஏளிமையான் கதை, குழப்பாத நேர்கோட்டு திரைக்கதை. அசரவைகும் சிஜி, என ஒரு புது அனுபவத்தை தருகிறது படம். சிங்கங்கள், குரங்கு, பன்னி,ஒட்டகச்சிவிங்கி, மான் என படத்தில் வரும் அத்தனை மிருகங்களும் அனிமேஷன் என்பதை நம்ப முடியவில்லை.

அத்தனை துல்லியம். சிங்க்கத்தின் பார்வையில், அசைவில் எப்படி இத்தனை உணர்வுகளை கொண்டு வந்தாரகள் என வியக்க வைத்திருக்கிறார்கள்.குழந்தைகளுக்கு ஒரு குதூகல கொண்டாட்டமாக இப்படம் கண்டிப்பாக இருக்கும். ஆங்கிலத்தில் அனிமேஷன் படங்களுக்கு பிரபல நடிகர்கள் குரல் தருவாரகள் அது போல் இங்கும் இம்முறை தந்திருக்கிறார்கள். முதல் டயலாக்காக மரங்கொத்தி மனோபாலா பேசும்போதே நாம் ஒரு தமிழ் படம் பார்க்கிறோம் எனும் உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்கள். ஸ்காராக கலக்கியிருக்கிறார் அரவிந்த் சாமி அந்த குரோதத்தையும், வஞ்சத்தையும் தன் குரலில் கொண்டுவந்திருக்கிறார்.

சிம்பாவாக சித்தார்த் குரல் அழகு. அவர் மட்டும் தான் பாடல்களையும் தானே பாடியுள்ளார். மற்றவர்கள் பாடல் வரும்போது மட்டும் வேறு குரல்கள் வருவது நெருடல். பொதுவாய் ஆங்கிலத்தில் குரல் கொடுப்பவர்களே பாடவும் செய்வாரகள். நம் நடிகர்களுக்கு வராதது வருத்தமே! டிமோனாக சிங்கம்புலி, பும்பாவாக ரோபோ சங்கர் இந்த இரு கூட்டணி தான். படத்தின் நகைச்சுவைத் தூண். சிங்கம்புலியின் டைமிங்க் அசரடிக்கிறது. அவருக்கு அமைந்திருக்கும் பஞ்ச்கள் அனைத்தும் அட்டகாச ரகம். “பும்பா பன்னியிலேயே நீ ஒரு சிங்கம்டா” எனும் போது தியேட்டர் அதிகிறது.

‘இந்த தண்ணியில்லாத காட்டுக்குத்தான் இத்தன சண்டையா’ என வசனங்கள் ஒவ்வொன்றும் வயிறு குலுங்க வைக்கிறது. தமிழ் வசனங்கள் அற்புதமாய் வந்திருக்கிறது. பல இடங்களில் ரோபோ சங்கரும்,சிங்கம் புலியும் வசனங்களை நிரப்பிக்கொண்டது போல் தெரிகிறது. ரோபோ சங்கர் தனது மிமிக்கிரியை மீட்டெடுத்திருகிறார். வாழ்த்துக்கள். ராகிணியும், ஐஸ்வர்யா ராஜேஷிம் தங்கள் பங்க்கை அழகாக செய்துள்ளார்கள்.

அயன் மேன் இயக்குநர் ஜான் ஃபெவரு இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த ஆண்டின் சிறந்த வெற்றிப்படமாக அமையும் அத்தனை தகுதியுடன், குழந்தைகள் கொண்டாடும் படமாக தந்துள்ளார். குறை என்று சொல்ல ஒன்றும் இல்லாமல் ஆக்கி வைத்திருப்பதே, இயக்குநரின் திறமைக்கு சான்று. இசை நம் காதுகளில் படம் முடிந்தும் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கிறது. ஆயிரக்கணக்கில் தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்படத்தில் வேலை செய்திருக்கிறார்கள் அத்தனை பேரின் உழைப்பும், திரையின் உச்ச அனுபவத்தை நமக்குத் தந்திருக்கிறது.

பலம் – தமிழ் வசனங்கள், தமிழ்க்குரல், அசரவைக்கும் சிஜி.

பலவீனம் – தெரிந்த திரைக்கதை, பாடல்களில் மாறும் குரல்.

ஃபைனல் பஞ்ச் – குழந்தைகளின் கொண்டாட்டம், கண்டிப்பாக தவறவிடக்கூடாத திரை அனுபவம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here