குடிபோதையில் தகராறு செய்த கணவனை ஊதுகுழலை வைத்து அடித்து கொன்ற மனைவி!

0
83

வையம்பட்டி அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவனை ஊதுகுழலை வைத்து மனைவியே அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள வத்தமணியாரம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (42). கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு திருமணமாகி 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

மதுபோதைக்கு அடிமையான முருகேசன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதே போல் நேற்று இரவும் முருகேசன் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டள்ளார். இதனால் கணவன் – மனைவிக்கு இடையே வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பஞ்சவர்ணம் ஊதுகுழலை எடுத்து முருகேசன் தலையில் ஓங்கி அடித்ததில், தலையில் பலத்த காயமடைந்த முருகேசன், ரத்த வெள்ளத்தில் நிலை குலைந்து கீழே விழுந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் மனைவி படுகாயமடைந்த முருகேசனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது மனைவி பஞ்சவர்ணம் தலைமறைவானது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை மனைவியே அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here