தும்பா சினிமா விமர்சனம்

0
276

நடிகர்கள் :

தர்ஷன்,தீனா,கீர்த்தி பாண்டியன்,பாலா
கரு: ஒரு புலியை படம்பிடிக்கப் போய் காட்டுக்குள் மாட்டிகொள்ளும் மூவரின் ஃபேண்டஸி பயணமே தும்பா படம்.

கதை: டாப் சிலிப்புக்கு சிலைக்கு பெயிண்ட் அடிக்க போகிறார்கள் தீனாவும் தர்ஷனும் அங்கே புலியை போட்டோ எடுக்கும் லட்சியத்துடன் வருகிறார் கீர்த்தி பாண்டியன். காசுக்காக தர்ஷனும் தீனாவும் புலியை காட்டுகிறேன் என கீர்த்தி பாண்டியனுடன் பயணமாகிறார்கள். அதே நேரத்தில் புலியை கொல்ல ஒரு குழு பயணமாகிறது. புலியை போட்டோ எடுத்தார்களா? புலி காப்பாற்றப்பட்டதா என்பது தான் கதை.

காட்சிப்படுத்துதல்: படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே இது குழந்தைகளுக்கான படம் என்பது தெரிந்து விடுகிறது. முழுக்க காட்டுக்குள்ளேயே பயணமாகும் ஒரு படம். தர்ஷனும் தீனாவும் மிருகங்களுக்கு பயப்படும் காட்சிகளும், குரங்கு செய்யும் சேட்டைகளும் மிக அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது. குரங்கு, யானை, புலி என குழந்தைகள் விரும்பும் விலங்குகளின் காட்சிகள் சரியான இடைவெளியில் வந்து கொண்டே இருக்கிறது. இறுதிக்காட்சியில் குரங்கு செய்யும் ஜாலங்கள் குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும். குழந்தைகளை மனதில் வைத்து ஒரு ஃபேண்டஸி படம். சொல்ல வந்ததை சரியாகச் செய்துள்ளார்கள். படத்தின் கதையில் எந்த தடங்கலும் இல்லாமல் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது நன்று. காமெடி வசனங்கள் படத்திற்கு பெரிய பலம். ஜெயம் ரவி கேமியோ ஒரு ஆச்சர்யம்.

நடிப்பு: தர்ஷன் பயந்தாங்கொள்ளியாக வருகிறார். அவர் கேரக்டருக்கு அது சரியாக பொருந்திப்போகிறது. தீனாவிடம் திட்டு வாங்கிக்கொண்டே இருக்கும் ஹீரோ. இமேஜ் பார்க்காமல் நடிதிருப்பது அழகு. தீனா நடிகராக முதல் அவதாரம் மனதில் பச்சக்கென ஒட்டிக்கொள்கிறார். அவரது காமெடி கவுண்டர்கள் எல்லாம் கலகலப்பு. அவரது உடல்மொழி அவருக்கு பெரும்பலம். கீர்த்தி பாண்டியன் தமிழ் சினிமாவின் புதுவரவு ஹிரோயின். உடலமைப்பை தாண்டி நடிப்பில் கவர்கிறார். முகபாவங்களிலும் புலிக்கு உதவும் இடங்களில் நடிப்பு சூப்பர்.

தொழில்நுட்ப குழுவினர்: ஒரு ஃபேண்டஸி படத்தை அளித்த விதத்தில் படத்தை தமிழில் ஓரளவு முக்கியமான படைப்பாக மாற்றியதில் படக்குழுவின் அசுர உழைப்பு தெரிகிறது. குரங்கு, யானை, புலி என மிருகங்களும் காடும் படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிஜி vfx டீம் அதற்காக வெகு அருமையாக உழைத்திருக்கிறது. புலியை நேரில் உண்மையாக பார்த்துபோலவே உள்ளது. நரேன் இளன் ஒளிப்பதிவில் டாப்சிலிப்புக்கு நேரில் டூர் சென்றது போல் இருக்கிறது. காடு அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கிறது. அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி மூவர் இசையமைத்யிருக்கிறார்கள் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னனி இசை படத்திற்கு பொருத்தம். குழந்தைகளை கவரும் ஆக்‌ஷன் காட்சிகளில் ஸ்டண்ட் அமைப்பாளர் மிளிர்கிறார்கள்.

இயக்கம்: ஹரீஷ் ராம். முதல் படம் போல் இல்லாமல் நன்றாகவே இயக்கியிருக்கிறார். குழந்தைகளுக்கு தமிழில் ஃபேண்டஸி இல்லை என்ற குறையை போக்கியிருக்கிறது இப்படம். கதை திரைக்கதை எதிலும் தடுமாற்றம் இல்லை. மேலும் காட்சிபடுத்தியதிலும் கவனம் ஈர்த்துள்ளார் இயக்குநர் ஹரீஷ். ஆனால் குழந்தைகளுடன் சென்றால் மட்டுமே ரசிக்கக்கூடிய திரைக்கதை ஒரு பலவீனம். மேலும் பெரியவர்களை கவரக்கூடிய எதுவும் படத்தில் இல்லாதது ஒரு குறை.

பலம்: குழந்தைகளுக்கு பிடிக்கும் ஃபேண்டஸியை சரியாக சொன்னது.

பலவீனம்: பெரியவர்களை கவராத திரைக்கதை.

ஃபைனல் பஞ்ச்: காட்டுக்குள் புலியுடன் ஒரு ஃபேண்டஸி பயணம் ! குழந்தைகளுடன் செல்ல ஏதுவான அழகான பயணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here