குழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு

0
109

குழந்தைகளின் உதட்டின் உள் பகுதியில் வாய்ப்புண் வரும். பார்க்க சின்ன வட்டமான மாத்திரை போல, அந்த இடத்தைச் சுற்றி சிவந்து காணப்படும். கோடைக்காலத்தில் சிறுவர்களுக்கு வாய்ப்புண் வருவது சகஜம் என்றும் நினைக்கிறோம். வாய்ப்புண் குழந்தைகளின் உதடு, நாக்கு, வாயின் உட்பகுதி, தொண்டை போன்ற பகுதிகளில் சிறியது முதல் பெரியளவு வரை வந்து உணவு உண்ணும்போது, உமிழ்நீர் விழுங்கும்போது பற்கள் படும்போது போன்ற நேரங்களில் கடும் வலியை ஏற்படுத்தும். இதைத் தடுக்க என்ன முயன்றாலும் முடிவதில்லை என்று குறைபட்டுக்கொள்ளும் பெற்றோர்களே… பலரும் சொல்வதுபோல வாய்ப்புண் ஏற்பட உடல்சூடுதான் முதன்மையான காரணமா… அதற்கான தீர்வுகள்தான் என்னென்ன… உள்ளிட்டவை பற்றி, குழந்தைகள் நல மருத்துவர் செல்வன் கூறும் தகவல்களைப் பார்ப்போம்.

பொதுவாகவே, ஒரு பிரச்னைக்கான காரணங்களைத் தெரிந்துகொண்டாலே, அதிலிருந்து எளிதாக வெளியே வந்துவிடலாம். தேவையற்ற பயம் கொள்ளவேண்டியதில்லை. வாய்புண் என்பது உடலில் பி காம்ப்ளக்ஸ் எனும் சத்துப்பொருளின் குறைபாடு காரணமாகவே பலருக்கும் வருகிறது. உடற்சூட்டிற்கும் வாய்ப்புண்ணிற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. மேலும், முந்தைய காலகட்டத்தில் இந்தச் சத்து குறைபாடு என்பது குழந்தைகளிடையே அதிகம் காணப்பட்டது. ஆனால், தற்போதைய நிலையில் அது குறைந்து வருகிறது. மேலும், வாய்ப்புண் வருவதற்கு வைரஸ் கிருமி தொற்றும் ஒரு முக்கியக் காரணமாகும். குழந்தைகள் விளையாடும்போது அசுத்தமான பகுதி மற்றும் பொருள்களினால் ஏற்படும் கிருமித்தொற்று வாய்ப்புண் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. மேலும், குழந்தைகள் சாப்பிடும் துரித உணவு மற்றும் சத்தில்லாத உணவுகளாலும் அவர்களின் உடல்நிலையில் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதன் வெளிப்பாடாகவும் வாய்ப்புண் வரலாம்.

சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் எடுத்துக்கொள்ளும் மருந்து, மாத்திரைகளால் வாய்ப்புண் வருவதாக பயந்து விடுகின்றனர். அதற்கான வாய்ப்புகள் இல்லை. அதை மீறியும் பெற்றோர்களின் சந்தேகம் அதிகரித்தால், உங்கள் குழந்தைக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் நேரில் சென்று, ஆலோசனை பெறலாம்.

சில பெற்றோர்கள், குழந்தைகளுக்கு வயிற்றுப் புண் இருப்பதால், வாய்ப்புண் வந்திருக்கிறது என்று நினைக்கின்றனர். இதுவும் தவறான எண்ணமே! குழந்தைகளுக்கு ஏற்படும் கிருமித்தொற்று வாய் வழியாக உடலினுள் நுழையத் தொடங்கி, பின் வயிற்றில் சென்று தீய விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், கிருமித்தொற்றின் தொடக்கமாகவே வாய்ப்புண் வருவதைப் பார்க்க வேண்டும்.

வாய்ப்புண் வராமல் தடுக்க, கீரை, காய்கறிகள் உள்ளிட்ட இயற்கை உணவுகளை அதிகம் குழந்தைகளுக்குத் தர வேண்டியது அவசியம். தினமும் இரு முறை பல் துலக்குவதும், சாப்பிட்ட பிறகு சரியாக வாயினைக் கொப்பளித்துத் தூய்மையாக்குவதும் மிகவும் அவசியம். இதைக் குழந்தைகள் தவறாமல் செய்கிறார்களா என்று பார்ப்பது பெற்றோரின் கடமை. துரித உணவுகள் மற்றும் எண்ணெய், காரம் அதிகம் உள்ள உணவுகளையும் கடை உணவுகளையும் தவிர்த்தாலே வாய்ப்புண் வருவதையும் தவிர்க்கலாம். மருத்துவரின் ஆலோசனையோடு பி காம்ப்ளக்ஸ் மருந்து, மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்!” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here