நெஞ்சு வலி வந்தால் பயப்பட வேண்டாம்; ஏதோ அதற்கான விடை

0
82

லேசாக நெஞ்சு வலித்தால்கூட அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ, இதயக் கோளாறாக இருக்குமோ என்கிற அச்சம் பலருக்கும் உள்ளூர எழுகிறது. யாரோ சொல்லக் கேட்டது, கூகுளில் தேடியது என எல்லாவற்றையும் போட்டு ஒட்டுமொத்தமாகக் குழப்பி, அது மாரடைப்புதான் என்கிற பயம் வரத்தான் செய்கிறது. ஆனால், சாதாரண வாய்வுத் தொல்லையால்கூட நெஞ்சுவலி ஏற்படலாம்.

நெஞ்சுவலிக்கு வாய்வுத் தொல்லையும் காரணமாக இருக்கலாம்; மாரடைப்பும் காரணமாக இருக்கலாம். இவற்றை எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்று விளக்கமாகச் சொல்கிறார் இதயநோய் சிறப்பு மருத்துவர் கார்த்திக்.

“அடிப்படையில், வாய்வுத் தொல்லை, மாரடைப்பைத் துல்லியமாக வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ஆனாலும், அறிகுறிகளை வைத்து ஓரளவு வகைப்படுத்தலாம். நெஞ்சு வலி என்று வந்தால், முதலில் நமக்கு நாமே சில கேள்விகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

* வலி, துல்லியமாக எந்த இடத்தில் ஏற்பட்டுள்ளது.

* வலி மட்டுமன்றி, வேறு என்னென்ன உணர்வுகள் மற்றும் அறிகுறிகள் ஏற்படுகின்றன.

அறிகுறிகள்

மாரடைப்பின்போது நெஞ்சுப் பகுதியில் அதிக அழுத்தத்துடனும் இறுக்கமாகவும், வலி அதிகமாகவும், பாரமாகவும் இருக்கும்.

தொண்டைப்பகுதியில் அழுத்தம் ஏற்படும். வாய்வுத் தொல்லை அல்லது நெஞ்செரிச்சலின்போது குறிப்பிட்ட பகுதியின் உள்ளே இருந்து யாரோ குத்துவது போன்ற உணர்வும், இழுப்பதுபோன்ற உணர்வும் ஏற்படும். அதேபோல் மூச்சுத்திணறலோ, தோள்பட்டையில் வலியோ, தொண்டையில் அழுத்தமோ ஏற்படாது.

வாய்வுத் தொல்லையின்போது வாய்நாற்றம், பற்சிதைவு, உணவு விழுங்குவதில் சிக்கல், வாந்தி, எதுக்களித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். சிலருக்கு, நெஞ்சுப் பகுதியில் இல்லாமல், பின்முதுகு அல்லது குறிப்பிட்ட ஒரு பகுதியில் உள்ளே இருந்து ஏதோவொன்று இழுப்பதுபோன்ற உணர்வு ஏற்படலாம்.

நெஞ்செரிச்சலின்போது, புளித்த ஏப்பம் அதிகமாக ஏற்படும். மூச்சுக் குழாயில் ஏற்படும் எரிச்சலால், உடலில் அமிலத்தன்மை அதிகரிப்பதை உணர முடியும். அதேபோல நெஞ்செரிச்சல், சாப்பிடுவதற்கு முன் அல்லது சாப்பிடாத நேரங்களில்தான் அதிகம் ஏற்படும். அமிலத்தன்மை அதிகம் இருக்கும் என்பதால், ஆரோக்கியமான உணவு உண்டதும் இந்தப் பிரச்னை உடனடியாகச் சரியாகிவிடும்.

இவற்றை அடிப்படையாக வைத்து, உங்களுக்கு ஏற்படும் நெஞ்சு வலி மாரடைப்பா அல்லது வாயுத் தொல்லையா என்பதை நீங்களாகவே கணித்துக்கொள்ளலாம். அடிப்படையில் நெஞ்சு வலி என்பது நெஞ்செரிச்சல், மாரடைப்பு, வாய்வுத் தொல்லைக்கான அறிகுறிளாக இல்லாமல், வேறு சில பிரச்னைகளுக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். உதாரணமாக மூச்சுக் குழாயில் அமிலத்தன்மை அதிகமாவது, ஹெர்பிஸ் அக்கி, தசைப்பிடிப்பு, மார்பின் உட்பகுதியிலுள்ள எலும்பில் ஏற்படும் பாதிப்புகள், நுரையீரலின் மேற்பரப்பு பாதிக்கப்பட்டிருப்பது போன்றவை. சிலருக்குப் பதற்றம் அதிகரிக்கும்போது, அதன் காரணமாகக்கூட நெஞ்சு வலி ஏற்படலாம். இது, மருத்துவ மொழியில் பேனிக் அட்டாக் எனப்படும்.

இப்படியாக நெஞ்சு வலிக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. எனவே, வலி ஏற்பட்டதும் அது மாரடைப்பாக இருக்கும் என்று பயப்பட வேண்டாம். அதேநேரம், இந்த வலிகளை உதாசீனப்படுத்தவும் கூடாது. எதுவாக இருந்தாலும், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று இ.சி.ஜி செய்து தகுந்த மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அத்துடன் அனைவருமே வருடத்துக்கு ஒருமுறை ரத்த சர்க்கரை அளவு, ரத்தப் பரிசோதனை, முழு உடல் பரிசோதனை, இதயச் செயல்பாடுகள் போன்றவற்றுக்கான பரிசோதனைகளைச் செய்துகொண்டு ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here